முகப்பு
மதுரை

பழனி அருகே கிராம மக்களே சீரமைக்கும் சாலை

பழனி, டிச. 20:      பழனி அருகே அரசின் பாராமுகத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பத்தினர், அவர்களே நிதி வசூல் செய்து சாலைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.      பழனியை அடுத்தது பாலாறு பொ

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:37 PM
பகிர்:

பழனி, டிச. 20:      பழனி அருகே அரசின் பாராமுகத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பத்தினர், அவர்களே நிதி வசூல் செய்து சாலைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

     பழனியை அடுத்தது பாலாறு பொருந்தலாறு அணை.  திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப் பெரிய அணையான இது நிரம்புவது என்பது அரிது. இந்த அணை கடந்த தொடர் மழை காரணமாக பல நாள்கள் நிரம்பி வழிந்தது. இந்த அணையில் இருந்து பொருந்தல் கிராமத்துக்குச் செல்லும் வழி உள்ளது.  பொருந்தல் மற்றும் அருகிலுள்ள சிறு கிராமங்கள் என சுமார் 250 குடும்பங்கள் இந்தச் சாலை வழியேதான் நகருக்கு வந்து செல்கின்றனர்.

  பொருந்தல் வரையிலும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இங்கு வசிக்கும் கிராம மக்கள் அனைவரும் விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும், செங்கல் சூளைகளுக்கு வேலைக்குச் செல்பவர்களாகவும் உள்ளனர்.

    இப் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாலைகள் அரித்துச் செல்லப்பட்டன.  பாலாறில் இருந்து பொருந்தல் செல்லும் வழியில் உள்ள பாலங்களின் கான்கிரீட் மற்றும் கற்கள் அரித்துச் செல்லப்பட்டு, குண்டும், குழியுமாக மாறியது.  இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.  இதனால் ஊருக்குள் வரும் பஸ் நிறுத்தப்பட்டது.

    இதனால் கிராம மக்கள் பாலாறில் இருந்து சுமார் 6 கி.மீ தூரம் நடந்தே ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.  தவிர, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் தினமும் 12 கி.மீ தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.   இதனால் பொதுமக்கள் திரண்டு வட்டாட்சியர், பாலசமுத்திரம் பேரூராட்சி, பெரியம்மாபட்டி ஊராட்சி, கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத் துறை என பலருக்கும் மனுக்கள் கொடுத்து கொடுத்து அலுத்துப் போயினர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டு, 10 நாள்களுக்குள் சாலை சீரமைக்கப்படும் எனத் தெரிவித்துச் சென்றார். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

   பாலசமுத்திரம் பேரூராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பாலசுப்ரமணிய துரைராஜா உள்ளார்.  பெரியம்மாபட்டி ஊராட்சி தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த முருகேஸ்வரி பாண்டியன் உள்ளார்.  இவர்கள் இருவருமே கிராம மக்களிடம் இந்த பகுதி தங்கள் எல்லைக்குள் வராது எனக் கூறி அலைக்கழித்துள்ளனர்.   

  கடந்த 15 நாள்களுக்கும் மேலாக நகர் உறவு துண்டிக்கப்பட்ட நிலையில், கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து தாங்களே சாலையைச் சீரமைக்கலாம் என முடிவு செய்தனர்.  அதன்படி, கிராம மக்களிடமும், முக்கியப் பிரமுகர்களிடமும் கிராம மக்கள் வசூல் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

  சுமார் ரூ. 3 லட்சம் தேவை என்ற நிலையில், இதுவரை ரூ. 1.5 லட்சம் சேர்த்துள்ளனர்.  இதன்படி முதல்கட்டமாக முக்கியப் பாலங்கள், சேதமடைந்து அரிக்கப்பட்ட சாலைகளைச் சீர் செய்து வருகின்றனர்.

 ஆண்கள், பெண்கள் என 40-க்கும் மேற்பட்டோர் இடத்தைப் பகிர்ந்து கொண்டு பணிகளை கடந்த இரு நாள்களாகச் செய்து வருகின்றனர்.  இப் பணியில் 5 டிராக்டர்களும், ஒரு ஜேசிபி இயந்திரமும் இயக்கப்பட்டு வருகிறது.  

 மண் அரிக்கப்பட்ட இடங்களில் மேலும் மண் அரிக்காவண்ணம் மணல் மூட்டைகளை நேர்த்தியாக அடுக்கி வருகின்றனர்.

  பொருந்தலைச் சேர்ந்த பழனிமுத்து, ஆறுமுகம், ரவீந்திரன் ஆகியோர் கூறும் போது, சாலைப் பணிக்காக மெட்டல், சரளை மற்றும் மணல் கூட கூடுதல் பணம் கொடுத்துத்தான் வாங்கி வேண்டியுள்ளது.  தங்கள் கிராமத்தைப் புறக்கணித்த இந்த அரசுக்கு வரும் தேர்தலின்போது வாக்களிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.    

அரசு புறக்கணித்தாலும், துவண்டு போகாமல், வெகுண்டெழுந்து செய்யும் கிராம மக்களின் இப் பணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.