தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காத சிவகங்கை பஸ் நிலையம்
சிவகங்கை, டிச. 29: எங்கு பார்த்தாலும் புழுதி, குடி தண்ணீர் இல்லை, நேரம் காட்டாத மணிக்கூண்டு, சுகாதார சீர்கேடு என பல்வேறு குறைகளுடன் கடமையாற்றிக் கொண்டுள்ளது சிவகங்கை ராணி ரெங்க நாச்சியார் நினைவு பஸ் ந
சிவகங்கை, டிச. 29: எங்கு பார்த்தாலும் புழுதி, குடி தண்ணீர் இல்லை, நேரம் காட்டாத மணிக்கூண்டு, சுகாதார சீர்கேடு என பல்வேறு குறைகளுடன் கடமையாற்றிக் கொண்டுள்ளது சிவகங்கை ராணி ரெங்க நாச்சியார் நினைவு பஸ் நிலையம்.
மதுரை, திருச்சி, வேளாங்கண்ணி, சேலம், நாமக்கல், திருப்பூர், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் இங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் நாள்தோறும் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட நடைகள் சென்று வருகின்றன. இவற்றில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாள்தோறும் பயணமாகி சிவகங்கை பஸ் நிலையம் வழியாகச் செல்கின்றனர்.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் நிலையத்தில் இருபுறமும் பஸ் நிறுத்த தனித்தனியே கட்டடங்கள் உள்ளன. இவை மத்திய, மாநில ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு, 1987 ஆம் ஆண்டு மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தால் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது இங்கு அடிப்படை வசதிகள் என்பது எள் அளவும் இல்லை. தாகத்துடன் வரும் பயணிகள் 2 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாக்கெட்டை வாங்கி குடிக்கும் நிலையே உள்ளது. வறட்சி நிவாரணத் திட்டம் 2007-08-ன் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் தலா 80 ஆயிரம் செலவில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இரும்புக் கம்பி தடுப்புக்குள் பாதுகாப்பாக உள்ள இவை செயல்படாமல் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.
பாதாளச் சாக்கடைப் பணி நடைபெற்ற சமயத்திலிருந்து இங்கு தண்ணீர் வருவதில்லை. சாக்கடைக்காக பள்ளம் வெட்டும்போது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு தண்ணீர் வரும் குழாய் உடைந்திருக்கலாம் என்று கூறினார் இங்கு கடை நடத்திவரும் சரவணன்.
காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையும் இங்கு அதிக அளவில் பஸ்கள் வருவதால், இட நெருக்கடி காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த இலவச கழிப்பிடம் பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டியே கிடக்கிறது. கட்டணக் கழிப்பிடத்தைப் பயன்படுத்த கண்டக்டர்கள், டிரைவர்கள் உள்ளிட்ட அனைவரிடமுமே ரூ.3 கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆண்களில் பலர் பூட்டப்பட்ட பழைய இலவச கழிப்பிடத்தின் சுவரையே கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது என்றார் போக்குவரத்துக் கழக ஊழியர் முத்துச்சாமி.
இதுமட்டுமின்றி, எல்லா பஸ் நிலையத்திலும் சாபக்கேடு போல ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளுக்கும் இங்கு குறைவு இல்லை. பயணிகள் நிற்க வேண்டிய இடங்களில் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், பயணிகள் பஸ்கள் நிற்க வேண்டிய பகுதியில் நிற்கின்றனர். இந்த பஸ் நிலைய வாயிலின் முன்னே ஒரு வங்கியின் சார்பில் மணிக்கூண்டு கட்டி டிஜிட்டல் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பராமரிப்பின்றி பயனற்றுக் கிடக்கிறது.
இவற்றுக்கெல்லாம் தீர்வு எப்போது என்று கேட்டபோது, நகராட்சித் தலைவர் நாகராஜன் கூறியது:
பஸ் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள் தண்ணீர் பாக்கெட், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்க வேண்டும் என்பதற்காக இந்த இயந்திரங்களை கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களால் உடைத்து, நாசப்படுத்தி விடுகின்றனர்.
இதுவரை 8-9 முறை அவற்றைச் சரிசெய்தும் இதே நிலை மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. பஸ் நிலையத்தில் போலீஸ் நிலையம் இருந்தும் இது நிகழ்வதுதான் வருத்தமளிக்கிறது.
பழைய இலவச கட்டணக் கழிப்பிடக் கட்டடத்தை சிலர் சமூக விரோத செயல்களுக்குக் கூடப் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. விரைவில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்க உள்ளன. கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை கூட நடந்து விட்டது. கட்டுமானப் பணியின் போது பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய வடிவமைப்பில் கட்டடம் கட்டப்படும். அப்போது அனைத்து குறைகளும் தீர்த்து வைக்கப்படும் என்றார்.