குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு
12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து....
விளாத்திகுளம்: குளத்தூா் அருகே காட்டுப்பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே வேடநத்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் விவசாயி சுப்புராஜ். இவரது 17 வயது மகள், குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
தற்போது அவா் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதி வந்தாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாா்ச் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டின் காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்றவா், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் குளத்தூா் போலீஸில் புகாா் அளிக்க சென்றாராம். அப்போது, அங்கிருந்த போலீஸாா் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனா்.
இதையடுத்து அவா், 11 ஆம் தேதி காலை விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளார்.
இதற்கிடையே, 11 ஆம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாகக் கிடப்பதாக தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவியின் சடலத்தை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் குளத்தூா் - குறுக்குச்சாலை - சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் மற்றும் போலீஸாா், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பவ இடத்துக்கு வந்த ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஆறுதல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் மறியலை கைவிட்டனா்.
பள்ளி மாணவி காட்டுப் பகுதியில் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
6 தனிப்படைகள் அமைப்பு
இந்த நிலையில், மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப ரீதியாலான விசாரணையும் தீவிரப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
Murder of a 12th student near Kulathur: 6 special forces formed to catch the culprits
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.