முகப்பு
மதுரை

போடியில் சுற்றுச்சாலை சீரமைக்கப்படுமா?

போடி, ஜன. 5: போடியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுற்றுச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். போடி நகராட்சி பகுதியில் சுமார் 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 4

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:18 PM
பகிர்:

போடி, ஜன. 5: போடியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சுற்றுச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

போடி நகராட்சி பகுதியில் சுமார் 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வைத்துள்ளனர். மேலும் போடி நகரில் ஏராளமான கார், வேன், ஆட்டோ, மினி லாரி, சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இவை மட்டுமின்றி, போடி நகரானது கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால், கேரளத்துக்கு வரும் வாகனங்களும், தமிழக பகுதியிலிருந்து கேரளம் செல்லும் வாகனங்களும் போடி நகருக்குள் வந்து செல்கின்றன.

கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும் போடிக்கு வருவதால் போடி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இந் நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் போடி நகர் வழியாக சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், தேவாரம், பாளையம், கம்பம் ஆகிய ஊர்களுக்குச் செல்கின்றன.

இந்த வாகனங்களும் போடி நகரின் வழியாகச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போடி நகரை பொருத்தவரை குறுகிய சாலைகள் காணப்படுவதால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. போடி நகருக்குள் வாகனங்கள் நுழையும்போது போஜன் பார்கிற்கு மேற்கே தேரடி வீதி பகுதியில் எதிரில் வாகனங்கள் வந்தால் இரண்டும் விலகிச் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

போடி பழைய பஸ் நிலையத்திலிருந்து திருமலாபுரம் காமராஜர் சிலை வழியாக சாலை காளியம்மன் கோயில் அருகே தேனி நெடுஞ்சாலையை அடைய சுற்றுச் சாலை உள்ளது. இந்த சாலை பராமரிப்பின்றிக் காணப்படுகிறது. இந்த சாலையில் உள்ள பி.டி.ஆர். பாலம் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது.

இந்த சாலையைச் சீரமைத்தால், போடி நகருக்குள் வரும் சரக்கு வாகனங்கள் இந்த சாலை வழியாக போடி நகருக்குள் வர முடியும். மேலும் போடி நகருக்குள் வராமல் கிராமங்களுக்குள் செல்ல வேண்டிய வாகனங்கள் இந்த சாலை வழியாக திருமலாபுரம், மேலச்சொக்கநாதபுரம் வழியாக உத்தமபாளையம சாலையை அடைந்து விடலாம்.

ஏற்கெனவே நகராட்சி சுற்றுச் சாலைத் திட்டத்தில் இந்த சாலை உள்ளது. இச் சாலை 60 அடி திட்டச் சாலை. இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பி.டி.ஆர். பாலத்தை புதிதாகக் கட்டி சாலையை சீரமைத்தால் பெரும்பாலான தனியார் வாகனங்கள் இந்த சாலை வழியாக தேனி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல முடியும்.

நகராட்சி நிர்வாகம் இந்த சாலையைச் சீரமைத்து சுற்றுச்சாலையாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.