பட்டா கிடைக்காமல் பரிதவிக்கும் குதிரையாறு அணைப் பகுதி மக்கள்
பழனி, ஜூலை 6: பழனியை அடுத்த குதிரையாறு அணைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டா கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். உடனே பட்டா வழங்க வேண்டுமென மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்ப
பழனி, ஜூலை 6: பழனியை அடுத்த குதிரையாறு அணைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டா கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். உடனே பட்டா வழங்க வேண்டுமென மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழனியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குதிரையாறு அணை. இந்த அணையைச் சுற்றி வளமான மலைப் பகுதி உள்ளதால், இங்கு ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அணையின் அடிவாரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. இந்த ஊருக்கு பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன. தார்ச்சாலை முற்றிலும் பெயர்ந்து, தற்போது பல கி.மீ. தூரத்துக்கு வெறும் மண் சாலையே உள்ளது.
குதிரையாறு அணைக்குச் செல்லும் வழியில் ஏராளமான விளைநிலங்கள, தோப்புகள், வயல்வெளிகள் உள்ளன. இங்கு வசிக்கும் விவசாயிகளும் இந்தச் சாலையையே நம்பியுள்ளனர்.
இந் நிலையில், அணையின் அடிவாரப் பகுதியில் வசிக்கும் 100 குடும்பத்தினர் 2 ஏக்கர் பரப்பளவில் நெருக்கமாக குடியிருப்பு அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே விவசாயக் கூலிகள். இவர்களில் பலரும் குடிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. இதற்கான வீட்டு வரி ரசீது, மின்கட்டண ரசீது கூட பலரும் வைத்துள்ளனர்.
இவர்களுக்கு அனைத்து வசதிகளும் ஊராட்சி சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. இலவச டி.வி. வழங்கப்பட்டுள்ள நிலையில், இலவச எரிவாயு இணைப்பும் இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஆனால், இன்று வரை இவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை.
நூறு குடியிருப்பு மக்களும் தலா ஒன்றே முக்கால் சென்ட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வீட்டுமனைப் பட்டாவுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் பகுதி பொதுப் பணித் துறையின் நீர்ப் பிடிப்பு பகுதியா என்ற கேள்விக்கு, பொதுப்பணித் துறை சார்பில் நீர்ப் பிடிப்பு பகுதி அல்ல, அவர்களுக்கு பட்டா வழங்க ஆட்சேபணை இல்லை என்றும் வருவாய் துறைக்கு பதில் வழங்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இன்றுவரை இவர்களின் முக்கியக் கோரிக்கையான வீட்டுமனைப் பட்டா கோரிக்கை நிராகரிக்கப்பட்டே வந்துள்ளது.
இங்குள்ள மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியான அழகேஸ்வரி என்பவர் கூறும்போது, நாங்கள் பல ஆண்டுகளாக இங்கேயே குடியிருந்து வந்ததால், வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை.
இங்குள்ள பழங்குடியின மக்களுக்குக் கூட பட்டா மற்றும் வீடு கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு பட்டா வழங்குவதில் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. மழைக் காலத்தில் வீடுகளை மராமத்துச் செய்யக்கூட மிகவும் யோசனை செய்ய வேண்டியுள்ளது. அப்படியும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்துதான் குடியிருந்து வருகிறோம். கடன் வாங்கியாவது கான்கிரீட் தளம் அமைக்கலாம் என்றால், பட்டா இல்லாமல் எந்த தைரியத்தில் செலவு செய்வது எனத் தெரியவில்லை. குழந்தைகளுடன் பயந்து பயந்து காலம் தள்ளுகிறோம் எனத் தெரிவித்தார்.
குடிசைக்கு கான்கிரீட் என அரசு அறிவித்துள்ள நிலையில், அந்தக் குடிசை வீடு கூட இல்லாமல் நாங்கள் உள்ளோம் என பெண்கள் பலரும் தெரிவித்தனர்.
இந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமாக இருப்பதால், பலருக்கும் இந்த கிராம மக்களின் கூக்குரல் வருமுன் காற்றிலேயே கரைந்து விடுகிறது. மாவட்ட நிர்வாகம் மனது வைத்து, இவர்களுக்குப் பட்டா வழங்கினால் மக்கள் என்றென்றும் அரசுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர்.