மதுரை

திருவாடானைப் பகுதியில் குடிநீர்ப் பிரச்னை

ராமநாதபுரத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட துவக்க விழாவின்போது, இன்னும் 3 மாதங்களில் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி தண்ணீர் கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது

கே. ரவி

ராமநாதபுரத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட துவக்க விழாவின்போது, இன்னும் 3 மாதங்களில் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி தண்ணீர் கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால்,ஆண்டு  ஒன்றுக்கு மேல் ஆகியும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முழுவதும் பெரும்பாலான ஊர்களில் காவிரி தண்ணீர் கானல் நீராக உள்ளது.

    திருவாடானை தாலுகா நம்புதாளையில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டாவூரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஏற்பட்டு வரும் மின்தடை, மோட்டார் பழுது ஆகிய காரணங்களால் இப்பகுதி முழுவதும் கடும் தண்ணீர் தட்டுபாட்டுக்கு உள்ளாகியுள்ளன.

    இது சம்பந்தமாக, நம்புதாளை ஊராட்சி மன்றத் தலைவர் முகைதீன் கூறுகையில்,

குடிநீர் வாரியம் வழங்கியுள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளதால், கடந்த பல மாதங்களாக தண்ணீர் இல்லை. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும், போதுமான தண்ணீர் வழங்கப்படுவதில்லை. இதற்கு அதிகாரிகள், குழாய் உடைந்துள்ளது, சரி செய்த பின்னர் தண்ணீர் விடப்படும் என்று தெரிவிக்கின்றனர்.

    இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதேபோல், திருவாடானை ஊராட்சி மன்றத்தில் ஏற்கெனவே 3 இடங்களில் ஆழ்துளை குழாய் கிணறு போடப்பட்டு, தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும், இப்பகுதியில் போதுமான தண்ணீர் இல்லாததாலும், தண்ணீர் உப்பு நிறைந்து கடினத் தன்மையுடன் இருப்பதாலும், இதனை அருந்தும் மக்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்னையை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தீர்க்கலாம் என்றால், போதுமான தண்ணீர் விடப்படுவதில்லை. சில நேரங்களில் நடு இரவில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    இது குறித்து, ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கமூர்த்தி கூறுகையில், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் போதுமான தண்ணீர் விநியோகிப்பதில்லை.

இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீர் கடினத்தன்மையுடன் உப்பு நிறைந்து காணப்படுவதால், காவிரி தண்ணீரையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

    எனவே, நிர்வாகம் போதுமான தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதே போன்று, முகிழ்ததகம், அஞ்சுகோட்டை, சோழியக்குடி, நவக்குடி, புதுக்குடி போன்ற கிராமங்களில் கடும் குடிநீர்த் தட்டுபாடு நிலவி வருவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் கூறுகையில், தற்போது போடப்பட்டுள்ள குழாய்கள் அதிக அழுத்தத்தால் உடைந்து விடுகின்றன. இவை சரிசெய்யப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாள்களில் சரி செய்யபடும் என்று தெரிவித்தார்.

    அதேபோல், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பொறியாளர் கூறுகையில், திருவாடானைக்கு போதுமான தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு உப்பு தண்ணீருடன் காவிரி தண்ணீரையும் கலப்பதால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், தொண்டிக்கு போதுமான தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

அங்கு ஏற்படும் பிரச்னைகளை பேருராட்சி நிரிவாகம் மூலம் சரி செய்து கொள்ள வேண்டும். நம்புதாளை ஊராட்சியில் குழாய்கள் இன்னும் இரண்டு நாளில் சரி செய்யப்பட்டுவிடும். கிராமப்புறங்களில் குடிநீர் பைப் லைன்களில் பழுது ஏற்பட்டுள்ளதால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவைகள் சரி செய்யபட்டு விட்டால், அனைவருக்கும் குடிநீர் கிடைத்து விடும் என்று தெரிவித்தார்.        

    இதற்கு, மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி, இப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க முன்வரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT