மனைவிக்குப் பிரசவம் பார்க்கும் கணவன்மார்கள்
பழனி, ஜூலை 27: பழனி அருகே வசிக்கும் மலைவாழ் மக்கள் குடும்பங்களில், மனைவிக்கு கணவன் அல்லது மாமியாரே பிரசவம் பார்ப்பார் என்பதும், இதில் நூறு சதம் சுகப்பிரசவம் என்பதும் விஞ்ஞான காலத்திலும் வியப்பை ஏற்பட
பழனி, ஜூலை 27: பழனி அருகே வசிக்கும் மலைவாழ் மக்கள் குடும்பங்களில், மனைவிக்கு கணவன் அல்லது மாமியாரே பிரசவம் பார்ப்பார் என்பதும், இதில் நூறு சதம் சுகப்பிரசவம் என்பதும் விஞ்ஞான காலத்திலும் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
பழனியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஆண்டிபட்டியை அடுத்து மேற்குமலைத் தொடர்ச்சி உள்ளது. இங்குள்ள பிராந்து மலை, பிராந்து மடை, மாங்குளி பள்ளம் பகுதிகளில் வசித்து வந்த 19 மலைவாழ் குடும்பங்களை, கடந்த ஆண்டு வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு சமவெளிப் பகுதிக்கு கொண்டு வந்தனர்.
ஆனால், மலைப் பாறைகளில் வசித்த அவர்களுக்கு, புதிய இருப்பிடம் உடல் கோளாறை வரவழைத்தது. பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து, குடிசைகள் கட்டித் தரப்பட்டது. அவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வனப்பகுதியில் விறகு, தேன், ஈஞ்சி சேகரித்து விற்பனை செய்ய உரிமம் ஆகியவை வழங்கப்பட்டது.
19 குடும்பங்களில் மொத்தம் 87 பேர் உள்ளனர். இவர்களுக்கு படிப்பறிவுக்காக தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சிறிய பள்ளியும் அமைக்கப்பட்டது. இந்த மக்கள் மறுவாழ்வுக்காக, வனத்துறையினர் மூலம் ஆடுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், அவரவர் குடும்பத்துக்கு அவரவர்களே பிரசவம் பார்த்துக் கொள்கின்றனர் என்ற தகவல் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
இவர்கள் உறவுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது குடும்பங்களில், மனைவிக்கு கணவன் அல்லது மாமியாரே பிரசவம் பார்ப்பாராம். பிரசவத்தின் போது பெண்கள் அழாமலும், சப்தம் போடாமலும் இருப்பார்கள் என்பது கூடுதல் தகவல். சமவெளிப் பகுதிக்கு வந்த பின்னரும் இது தொடர்கிறது.
இவர்களில் அசோகன், கன்னியம்மாள் தம்பதிக்கு 9 குழந்தைகள் உள்ளன. தற்போது கன்னியம்மாள் கர்ப்பமாக உள்ளார். தங்கள் குழந்தைகளில் எது முதல், எது கடைசி, எது எத்தனையாவது என்று கேட்டால் பலருக்கும் சொல்லத் தெரியவில்லை. வயதைக் கேட்டாலும் சொல்லத் தெரியாத அளவுக்கு படிப்பறிவின்றி உள்ளனர். சராசரியாக ஒரு வீட்டில் 4 குழந்தைகள் உள்ளன.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தை பிறப்புக்கு முதல் நாள் வரை மலைகளுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். அதே போல குழந்தை பிறந்த சில நாள்களிலேயே மலை உச்சியில் பல நாள்கள் தங்கி ஈஞ்சி சேர்க்க குழந்தையுடன் சென்று விடுகின்றனர்.
இங்கு வசித்த லட்சுமிக்கு (30) 4-வது பிரசவத்துக்காக, அங்கிருந்த ஒருவர் 108க்கு சொல்ல, அவர்கள் அவரை அருகே இருந்த சுகாதார மையத்துக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். அங்கு பிரசவம் சிக்கலாகவே, செவிலியர்கள் பழனிக்கு பரிந்துரை செய்தனராம். ஆனால், மலைவாழ் மக்களோ அவர்களை ஒதுங்கச் சொல்லிவிட்டு, குழந்தையை சரியான நிலைக்குக் கொண்டு வந்து சுகப்பிரசவமாக குழந்தையை ஈன்றெடுத்துச் சென்றுள்ளனர். முதல் முதலில் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அங்கும் இவர்களது கை மருத்துவமே வெற்றியளித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் இங்கு வந்த மாவட்ட மருத்துவக் குழுவினர், இவர்களில் 4 பேர் தங்களுடன் இருந்தால் சிசேரியன் போன்ற சிகிச்சைக்கு ரூ.20 ஆயிரம், 25 ஆயிரம் என்று செலவு செய்வதை தவிர்க்கலாம் என ஆச்சரியப்பட்டனராம்.
இதுவரை எல்லா பிரசவமும் சுகப்பிரசவமே. தாயும், சேயும் நலமே. தவறு நடந்ததே இல்லை என்கின்றனர் இவர்கள்.