மதுரை

தேனி புதிய பஸ் நிலையம்: வனத்துறை நிபந்தனையால் சர்ச்சை

தேனி, ஜூன் 6: தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க, தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் உள்ள வனத்துறை நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார்  செய்து, நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்ப

கோ.ராஜன்

தேனி, ஜூன் 6: தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க, தேனி-பெரியகுளம் புறவழிச் சாலையில் உள்ள வனத்துறை நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார்  செய்து, நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வனத்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

தேனியில் குறைந்த அளவு இடப்பரப்பில் செயல்பட்டுவரும் நகராட்சி பஸ் நிலையம், எந்நேரமும் நெரிசலுடன் காணப்படுகிறது. கேரள எல்லையிலும், மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரிலும் அமைந்துள்ள இந்த பஸ் நிலையம், "பி' கிரேடு அந்தஸ்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 25 பஸ்கள் நிறுத்துமிடம் (பஸ் பே) மட்டுமே உள்ளது. ஆனால், தினமும் 600 பஸ்கள் 19 ஆயிரத்து 123 முறை வந்து செல்கின்றன.

பஸ் நிலையத்தை மையமாகக் கொண்டுள்ள கம்பம், மதுரை, பெரியகுளம் சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. இதனால், தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தேனி-பெரியகுளம் புறவழிச்சாலையில் சிட்கோ வளாகம் அருகில் 7.35 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனத்துறை இடம் தேர்வு செய்யப்பட்டது.

புதிய பஸ் நிலைய இடத்துக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில், வருவாய்த்துறை மூலம் வனத்துறைக்கு இரு மடங்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையின் நிபந்தனைகளுக்கு உள்பட்டு, பஸ் நிலையம் அமைய உள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம், இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ. 11.50 கோடியும், வணிக வளாகம் அமைக்க ரூ. 4.50 கோடியும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு உள்ளாட்சிப் பங்கு மற்றும் கடைகள் மூலம் ரூ.5 கோடியும், திட்ட இடைவெளி நிரப்பு நிதி திட்டத்தில் அரசிடம் ரூ.1 கோடி மானியமும் பெறத்  திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி வசதிக் கழகத்தில் ரூ.10 கோடி கடன் பெறவும் முடிவு செய்யப்பட்டு, இதுகுறித்த தீர்மானம் நகராட்சிக் கூட்டத்தில், மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் 18 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் வழங்கியதற்கு வனத்துறை விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி, தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்பட சிலர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து மற்றொரு தரப்பு கவுன்சிலர்கள் கூறியதாவது:

தேனியில் தற்போது உள்ள பஸ் நிலையம், வாரச் சந்தை வளாகம் ஆகிய இடங்கள் ஆண்டுக் குத்தகை அடிப்படையில் பெற்றுதான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடம் இல்லாத நிலையில், தமிழ்நாடு வனத்துறை சட்டம் 1882 மற்றும் தமிழ்நாடு வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ஆகியவற்றிற்கு உள்பட்டு, வனத்துறையிடம் நிலம் பெறுவதற்கு ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர். தேனி நகராட்சி நிர்வாகம், புதிய பஸ்நிலையம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தாமல், ஒருமித்தக் கருத்துடன் செயல்பட்டு நகரில் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், பஸ் நிலையத்தில் நிலவிவரும் இடநெரிசல், எதிர்காலத் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, புதிய பஸ்நிலையம் தொடங்குவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று  பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT