ராமநாதபுரம்,மார்ச் 10: போதிய மழையின்றி கண்மாய்கள் நிரம்பாததாலும் அறுவடை நேரத்தில் நெற்கதிர்களில் பூச்சித் தாக்குதல் காரணமாகவும் ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி மாவட்டமாகி வருகிறது.
கடந்த 2009-2010ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பருவத்தில் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் எனக் கூறப்படும் திருவாடானை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய 6 தாலுகாக்களிலும் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடந்தது.
காலதாமதமாக பருவமழை துவங்கினாலும் விவசாயப் பணிகள் மாவட்டம்
முழுவதும் முழுவீச்சில் தீவிரமாகவே நடந்துவந்தன. ராமேசுவரம், ராமநாதபுரம் தாலுகாக்களில் நல்ல மழையும் திருவாடானை தாலுகாவில் சுமாரான மழையும் பெய்து வந்தது.
களை எடுத்தல், உரமிடுதல், மருந்து அடித்தல் என விவசாயிகளும் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் ஒரு சிலர் வங்கிக் கடன் பெற்றும் ஒரு ஏக்கருக்கு சுமார் 7000 முதல் 10 ஆயிரம் வரை செலவு செய்து நெல் சாகுபடி செய்திருந்தனர்.
இந்நிலையில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய 3 பகுதிகளிலும் இந்த ஆண்டு சிறிதளவு தான் மழை பெய்தது. கண்மாய்கள் நிரம்பவில்லை. இதனால் நெற்கதிர்கள் பரியும் நிலையில் தண்ணீரின்றி பயிர்கள் சேதம் அடைந்தன. பம்புசெட் வைத்திருந்த விவசாயிகள் மட்டும் விவசாயத்தை ஒரளவு பாதுகாத்துக்கொண்டனர்.
பரமக்குடி தாலுகாவில் பெரும் பகுதியில் விளைச்சல் இல்லை. கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளைப் பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழையின்றி தொடர்ந்து விவசாயிகள் பாதிப்பையே சந்தித்துவருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்டக் குழுச் செயலாளர் எம்.முத்துராமு கூறியதாவது:
கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாக்கள் தொடர்ந்து மழையின்றி பலத்த பாதிப்பை சந்தித்திருப்பதால் மேற்கண்ட மூன்று தாலுகாக்களையும்
வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.
ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை தாலுகாக்களில் விவசாயப் பணிகள் நல்ல முறையில் துவங்கி நல்ல விளைச்சல் ஏற்பட்டிருந்த நேரத்தில் அறுவடைக்கு சில
தினங்களே இருந்த நிலையில் நெற்கதிர்களில் நெற்பழ நோய், புகையான் நோய், குலைநோய் தாக்குதல் ஏற்பட்டு வயல்கள் முற்றிலும் அழிந்துபோயின.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, அதன் விவரங்களை மாவட்ட ஆட்சியருக்கும் வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கிறோம்.
அதிகாரிகளும் இப்வபகுதியில் சுமார் 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்டத்தில் நோய்
தாக்குதலாலும், போதிய மழையின்றி கடும் வறட்சியாலும் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.
எனவே மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்றார் எம்.முத்துராமு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.