தேனி, மே 16: தேனி மாவட்டத்தில் பெரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் கிராம மக்கள் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வாரியம் முன்வர வேண்டும்.
மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு மற்றும் மூல வைகை ஆற்றுப் பகுதிகளில் குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் தனித் திட்டங்களில் உறை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் திட்ட உறை கிணறுகளில் மின்மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்படும் தண்ணீர், உள்ளாட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் தரைமட்டத் தொட்டிகளில் தேக்கப்பட்டு சுத்திகரிக்கப்படாமல் பொதுமக்களுக்கு குழாய்களில் விநியோகம் செய்யப்படுகிறது.
முல்லைப் பெரியாற்றில் மழைக் காலங்களில் நீர்வரத்து அதிகம் உள்ள நிலையில், குடிநீர் திட்ட உறை கிணறு, மோட்டார் பம்ப், குழாய்கள் ஆகியவை நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடுகின்றன. இதனால் உறை கிணறுகளில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்ய முóடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
மேலும் மழை நீரில் அடித்து வரும் கழிவுகள் உறை கிணறுகளில் தேங்குவதால், பம்பிங் செய்யப்படும் குடிநீர் மாசு கலந்து விநியோகம் ஆகிறது. உறை கிணறுகளில் ஏற்படும் சேதங்களை சீரமைக்க பல நாள்களாவதால், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் லாரிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீருக்காக மக்கள் குடங்களுடன் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
ஆற்றில் தொடந்து மணல் அள்ளப்பட்டு வருவதால் வறட்சிக் காலங்களில் நீர் ஊற்று இன்றி உறை கிணறுகள் வற்றிவிடுகின்றன. இதுதவிர நகராட்சி, பேருராட்சிப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முல்லைப் பெரியாற்றில் பல இடங்களில் கலக்கின்றன. உறைகிணறுகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கழிவு நீர் தேங்குவதால் குடிநீரில் மாசு கலக்கிறது.
இதுதவிர, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை, தரைத் தொட்டிகளை மாதக்கணக்கில் சுத்தம் செய்வதில்லை. குடிநீரில் முறையாகக் குளோரின் கலப்பதில்லை.
மேல்நிலைத் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பகிர்மானக் குழாய்கள், வால்வுகள், தெருக்குழாய்கள், வீட்டு இணைப்புக் குழாய்கள் பெரும்பாலான இடங்களில் சாக்கடையை ஒட்டியுள்ள இடங்களிலும், சாக்கடை பாலத்திற்கு அடியிலும் செல்வதால் குடிநீர் குழாய் வழியாக சாக்கடை நீர் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
தெருக்குழாய்கள் முறையான மேடை கட்டுமானமின்றியும், தண்ணீர் கடந்து செல்ல வழியின்றியும் அமைக்கப்படுவதால், குழாயை சுற்றி கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்துகிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் வாரியம் மூலம் குடிநீரின் தன்மையை பரிசோதனை செய்வதற்கான சாதனங்கள் வழங்கப்பட்டிருந்தும், இவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை. குடிநீரின் தன்மையை அன்றாடம் பரிசோதித்து விநியோகம் செய்வதில்லை.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை தொற்று நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.