முகப்பு
மதுரை

அதிசயங்கள் நிறைந்த "ரெங்கசாமிகரடு'

பழனி அக். 15: பழனியை அடுத்த பாலசமுத்திரம் அருகே அதிசயங்கள் நிறைந்த ரெங்கசாமிகரடு மேல் உள்ள ரெங்கநாதர் கோயிலுக்கு சரியான பாதை இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.     பாலசமுத்திரத்தில் இருந்து

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:53 PM
பகிர்:

பழனி அக். 15: பழனியை அடுத்த பாலசமுத்திரம் அருகே அதிசயங்கள் நிறைந்த ரெங்கசாமிகரடு மேல் உள்ள ரெங்கநாதர் கோயிலுக்கு சரியான பாதை இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பாலசமுத்திரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அழகிய குன்று காணப்படுகிறது. ரெங்கசாமிகரடு என அழைக்கப்படும் இந்த மலை பல அதிசயங்களை உள்ளடக்கியது. இதன் அடிவாரத்தில் அரங்கநாதர் பாதம் என்ற கோயில் உள்ளது. இங்கு 4 கால் மண்டபம் மற்றும் பாதங்கள் உள்ளன.  

  பழனி மலைக்கோயிலை விட, 4 மடங்கு உயரமுள்ள இந்த குன்றின் உச்சிக்குச்  செல்ல பாதை இல்லை. மலைச்சரிவு, மரங்கள் இடையே உள்ள பகுதி, பாறைகள் என அடர்ந்த மலைக்காட்டில் செல்வது போல, பக்தர்கள் சிரமங்களுக்கு இடையே செல்கின்றனர். புரட்டாசியில் மட்டுமே அதிக அளவில் பக்தர்கள் செல்லும் இந்த வழியில் காட்டு யானைகள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக உள்ளது.

  மரம் ஒன்றின் கீழே ரெங்கநாதர் ஐந்து தலை நாகம் மீது சயனக் கோலத்தில் உள்ளார். அவர் நாபியில் இருந்து பிரம்மன் தாமரையில் வருவது போலவும், கையில் சிவலிங்கத்தையும் பிடித்த நிலையில் கலைநயத்துடன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பாதத்தில் இலக்குமி காலைப் பிடித்தவண்ணம் உள்ளார். ஒருபுறம் முருகப்பெருமான் மறுபுறம் ஆஞ்சநேயர் சிலைகள் அமையப் பெற்ற இச்சிலையை மொக்கச்சாமி தேவர் என்பவர் நிறுவி உள்ளார்.

   மலைமேல் இரு இடங்களில் வற்றா சுனை உள்ளது.  ஒரு சுனையில் தண்ணீர் இளம்பச்சை நிறத்தில் இருந்தாலும், கூடுதல் சுவையுடன் உள்ளது. மலையின் மேல் சைவகருப்பசாமி, கல்அத்தி மரம் உள்ளது. அடிவாரத்தில் உள்ள தொட்டிச்சியம்மனை நினைத்து, காரியம் கைகூடினால் மக்கள் மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.  

  இங்கு நான்கு பரம்பரையாக புரட்டாசிதோறும் பூஜை செய்யும் பூசாரி ராமு கூறுகையில், மழைக் காலம் வந்தால், இங்கு சென்றுவர அதிக சிரமமாக இருப்பதால் பக்தர்கள் வர அஞ்சுகின்றனர். இக்கோயிலுக்குப் பாதை அமைக்க ஏற்பாடு செய்தல் அவசியம் எனத் தெரிவித்தார்.

   சுனை சிவனாகவும், சிலை விஷ்ணுவாகவும், மலையே பிரம்மாவாகவும்  மும்மூர்த்திகள் உள்ள இங்கு, ஏராளமான சித்தர்கள் தங்கி தவம் செய்துள்ளனர். மலையில் கிடைக்கும் ஒரு செடியில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவையும் உள்ளன.  இதனால் உடலில் இளமை கூடுவதாக அறியப்படுகிறது.  

  இந்த மலை உச்சிக்கு வரும் பக்தர்களுக்கு, பழனி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் மற்றும் பக்தர்கள் மூலம் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விரைவில் சூரியஒளி விளக்கு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற அதிசயம் நிறைந்த மலை உச்சிக்கு பக்தர்கள் சென்று வர மாவட்ட நிர்வாகம் பாதை வசதி ஏற்படுத்த வேண்டும்.

 அக். 16 புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால், இங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்பது புண்ணியம் என்பது பெரும்பாலான பக்தர்களின் நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.