தேனி, செப். 5: தேனி மாவட்டத்தில் ஆவின் நிர்வாகம் மூலம்
1.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேனியில் உள்ள சிட்கோ வளாகத்தில் ஆவின் பால் குளிரூட்டும் மையம் உள்ளது. இங்கு மாவட்டம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் தினமும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, குளிர்விக்கப்பட்டு மதுரைக்கு அனுப்பப்படுகிறது.
மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் செலவினங்கள், பால் கொள்முதல் செய்வதில் ஏற்படும் காலதாமதம், போக்குவரத்து சிரமம் ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையில், 2008-09-ம் ஆண்டு 1.75 கோடி மதிப்பில் 7 இடங்களில் தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்கள் அமைக்க அரசு அனுமதி வழங்கியது.
இதன்படி, ஆவின் நிர்வாகம் மூலம் மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகம் நடைபெறும் இடங்கள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமப் பகுதிகளான ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள சித்தார்பட்டி காலனி, மேலப்பட்டி, க.மயிலை ஒன்றியத்தில் உள்ள வாய்க்கால்பாறை, தங்கம்மாள்புரம், முருக்கோடை, வருசநாடு, குமணந்தொழு ஆகிய இடங்களில் தலா 25 லட்சம் செலவில் 5,000 லிட்டர் கொள்ளவுள்ள பால் குளிர்விப்பு நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தால், அப்பகுதிகளில் உள்ள தொகுப்பு பால் குளிர்விக்கும் நிலையங்கள் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகை வழங்கப்படும். போக்குவரத்து சிரமம் மற்றும் செலவினங்கள் தவிர்க்கப்படும் என்பதால் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
ஆனால், காலதாமதமாகத் துவங்கிய பால் குளிர்விப்பு நிலையக் கட்டுமானம் மற்றும் எந்திரம் நிறுவும் பணி முழுமையடைந்தும், செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, வருசநாடு பகுதி பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், பால் குளிர்விப்பு நிலையப் பணிகள் முடிந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியும், அதிகாரிகள் ஆய்வுசெய்து செயல்பாட்டிற்குக் கொண்டுவர ஆர்வம் காட்டவில்லை. இதனால் மலை கிராமங்களில் இருந்து தேனியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் மையத்திற்கு பால் அனுப்பக் காலதாமதம், போக்குவரத்து சிரமம், செலவினங்கள் ஏற்படுகிறது என்றனர்.
இதுகுறித்து தேனி ஆவின் மேலாளர் தங்கராஜ் கூறியதாவது:
தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள எந்திரங்களை சோதனை ஓட்டம் நடத்தி அனுமதி வழங்கும் பணி முழுமை பெறவில்லை. மேலும், பல இடங்களில் நிரந்தர மின்இணைப்பு பெறப்படவில்லை. இப்பணிகள் முடிவடைந்ததும் பால் குளிர்விப்பு நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.