மதுரை

பொது கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு வருமா?

தேனி, பிப். 13:  தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் பொது கழிப்பறைகளைப் பராமரிக்கப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், பெரும்பாலான கழிப்பறைகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் பூட்டிக் கிடக்க

கோ.ராஜன்

தேனி, பிப். 13:  தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் பொது கழிப்பறைகளைப் பராமரிக்கப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், பெரும்பாலான கழிப்பறைகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் பூட்டிக் கிடக்கின்றன. இவற்றை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், பலரும் திறந்தவெளியைக் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆறு, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளைத் திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் நீராதாரம் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது.

சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில், முழு சுகாதார இயக்கத் திட்டம், எம்.எல்.ஏ., எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ஊராட்சிப் பள்ளிகள், பொது இடங்களில் தலா ரூ. 3 லட்சம் செலவில் 234 நவீன சுகாதாரக் கழிப்பறைகள் தேனியில் அமைக்கப்பட்டுள்ளன. இக் கழிப்பறைகளைப் பராமரிப்பதற்காக ஊராட்சி நிர்வாகங்களுக்கு அரசு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1,000 வழங்கி வந்தது.

இந்த நிதி மூலம் சுகாதார வளாகத் துப்புரவுப் பணிகள் மற்றும் மோட்டார் பம்ப் பராமரிப்புப் பணிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. கடந்த ஓராண்டாக பராமரிப்பு நிதி நிறுத்தப்பட்டு, ஊராட்சிப் பொது நிதியில் இருந்து செலவு செய்யுமாறு அரசு கூறிவிட்டது.

ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில் பொது கழிப்பறைகள் பராமரிப்புக்கு பொது நிதியை சரிவர பயன்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பொது கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

சிறப்பாக சுகாதாரத்தைப் பேணி வருவதற்காக மாவட்டத்தில் உள்ள 32 ஊராட்சிகளுக்கு நிர்மல் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கும் பொது கழிப்பறைகள் பூட்டியே கிடக்கின்றன.

சுகாதாரக் கழிப்பறைகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சிப் பணியாளர்கள் கூறியதாவது:குடிநீர், தெரு மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பராமரிப்பு மற்றும் பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவற்றிற்கே ஊராட்சியில் போதிய நிதி இல்லை. இந்நிலையில் சுகாதார வளாகப் பராமரிப்புக்கு தனியாக பணியாளரை நியமிக்கவும், கழிப்பறைகளை பராமரிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாத நிலை உள்ளது. ஊராட்சிகளில் பொது கழிப்பறைகளுக்கு கட்டணம் வசூலித்து பராமரிப்பதற்கு சுய உதவிக் குழுக்களோ, தனி நபர்களோ முன்வருவதில்லை என்றனர்.

மாவட்ட பொதுச் சுகாதார துணை இயக்குநர் செல்லத்துரை கூறியதாவது:திறந்தவெளிக் கழிப்பிடங்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கிராமங்களில் உள்ள பொது கழிப்பறைகளைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், திறந்தவெளிக் கழிப்பிடங்களை பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் ஊராட்சி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT