முகப்பு
மதுரை

கல்குளம் கண்மாயிலிருந்து வீணாகும் தண்ணீர்

சிவகங்கை, ஜன. 2: கல்குளம் கண்மாயில் மழைக் காலங்களில் தொடர்ச்சியாக உடைப்பு எடுப்பதாலும், மதகுகள் வழியாகத் தண்ணீர் வேகமாக வீணாவதாலும் ஒரு போகம் கூட பயிர் செய்ய முடியாத நிலையில் கிராம மக்கள் தவிக்கின்றனர

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:59 PM
பகிர்:

சிவகங்கை, ஜன. 2: கல்குளம் கண்மாயில் மழைக் காலங்களில் தொடர்ச்சியாக உடைப்பு எடுப்பதாலும், மதகுகள் வழியாகத் தண்ணீர் வேகமாக வீணாவதாலும் ஒரு போகம் கூட பயிர் செய்ய முடியாத நிலையில் கிராம மக்கள் தவிக்கின்றனர்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஆலங்குளம் ஊராட்சியைச் சேர்ந்தது கல்குளம் கிராமம். சுமார் 40 குடும்பங்கள் ஆண்டாண்டு காலமாக இங்கு வசித்து வருகின்றனர். அவர்களுக்கென்று உள்ள ஒரே நீர் ஆதாரம் கல்குளம் கண்மாய்.

இந்த கண்மாய் முழுவதும் நீர் நிறைந்திருந்த காலங்களில் அந்த கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் ஒரு போகம் விளைவிக்க முடிந்தது.

ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. இந்த கண்மாயின் கலங்கல் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கிறது. எனவே மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாகும்போது அதை பாதுகாப்பாக வெளியேற்ற முடிவதில்லை.

இதனால் பலம் குறைந்த பகுதியில் கரையை உடைத்துக்கொண்டு தண்ணீர் வெளியேறிவிடுவது பல ஆண்டுகளாக இங்கு நடக்கும் அலங்கோலம் இது.

இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் வந்து குடிசைகளுக்குள் புகுந்து இம்மக்கள் ஒதுங்கக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது. உடைப்பு ஏற்படும் காலங்களில் அதிகாரிகள் அங்கு வந்து கிராம இளைஞர்களுடன் இணைந்து உடைப்பை தாற்காலிகமாகச் சீர்செய்வதுடன் சரி. பின்னர் வருவதே இல்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த கண்மாயில் உள்ள 4 மதகுகளில் ஒன்று மட்டுமே உருப்படியாக உள்ளது. எஞ்சிய மூன்றில் இரண்டு திறக்க மூட முடியாமல் பயனற்றும், ஒரு மதகிலிருந்து ஓயாமல் தண்ணீர் வெளியேறிக்கொண்டும் உள்ளது. இந்த வேகத்தில் வெளியேறினால் ஒன்றரை மாதத்திலேயே முழுமையாக ஏரி வறண்டுவிடும். இந்தத் தண்ணீரை நம்பி எந்த விவசாயமும் செய்ய முடிவதில்லை. எனவே எங்கள் கிராம ஆண்களும், பெண்களும் கட்டட வேலைக்கும், செங்கல் சூளைகளுக்கும் வேலைக்குச் செல்கின்றனர் என்றார் இந்த கிராமத்தில் கவுன்சிலராக உள்ள கல்யாணசுந்தரம்.

எங்கள் ஊர் தலைவர் ரவிச்சந்திரன் மூலம் ஆட்சியர் குறை தீர்வு முகாமில் புகார் கொடுத்துப் பார்த்துவிட்டோம். எல்லா அதிகாரிகளிடமும் முறையிட்டுவிட்டோம் பயனில்லை என்றார் முனியாண்டி.

இந்த கண்மாயின் கலங்கலை சீரமைத்துக் கொடுத்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள 3 மதகுகளையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்கள் பகுதிக்கு நெற்களம் இல்லை. சிவகங்கை - இளையான்குடி நெடுஞ்சாலையில்தான் கதிரடிக்கின்றோம். இதனால் வாகனங்களில் செல்வோருக்கு இடையூறு ஏற்படுவதால் அதிகாரிகள் இதைத் தடுக்கின்றனர் என்றார் கிராம இளைஞர் பால்சாமி.

இப்பிரச்னைகளின் தீர்வு குறித்து சிவகங்கை ஊராட்சி ஆணையர் மாரியப்பனிடம் கேட்டபோது, நான் சமீபத்தில்தான் புதிதாக இங்கு ஆணையாக பதவியேற்றுள்ளேன். எனக்கு இதுபற்றிய புகார் வரவில்லை. விரைவில் அங்கு சென்று புகார் குறித்து பரிசீலனை செய்கிறேன் என்றார்.

ஒன்றிய துணைத் தலைவர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, கல்குளம் கண்மாய் குறித்து புகார் வந்தது. நாங்கள் அதிகாரிகளுடன் சென்று அந்தப் பகுதியைப் பார்வையிட்டோம். அந்த கண்மாயை வெள்ள நிவாரணப் பதிவேட்டில் பதிந்து வைத்துள்ளோம். எங்கள் ஒன்றியத்துக்கு வெள்ள நிவாரண நிதி கிடைத்தவுடன் அந்த கண்மாயைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →