முகப்பு
மதுரை

அரசு விதிமுறையை மீறி முடிக்கப்பட்ட பணிக்கு, பணி தொடங்குவதற்கான உத்தரவு

திண்டுக்கல், ஜன. 4: பணி முடித்து ஒரு மாதத்திற்குப் பின் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, வேலை தொடங்குவதற்கான பணி உத்தரவு விதிமுறையை மீறி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:01 PM
பகிர்:

திண்டுக்கல், ஜன. 4: பணி முடித்து ஒரு மாதத்திற்குப் பின் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, வேலை தொடங்குவதற்கான பணி உத்தரவு விதிமுறையை மீறி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆண்டிப்பட்டி ஊராட்சி. மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள இந்த ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை இப் பகுதியில் அதிகம் பெய்ததால், பள்ளியில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இதனால் மாணவர்கள் பளளிக்கு வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.   எனவே, பள்ளி மைதானத்தைச் சரி செய்து தர கோரிக்கை விடப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் தொடர் மழை காரணமாக 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதிலும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்தக்காரரைக் கொண்டு மைதானத்தில் மண் கொட்டி மேடிடப்பட்டு சமன் செய்யப்பட்டது.

  இந்த வேலைக்கான ஒப்பந்தப்புள்ளி டிசம்பர் கடைசி வாரத்தில் கோரப்பட்டது. பொதுவாக அரசுப் பணிக்கான வேலை செய்யும் முன்னர் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதில் குறைவான விலைப்புள்ளியைக் கொடுத்தவருக்கு பணி செய்வதற்கான உத்தரவு வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை.

Advertisement

   ரூ. 5 லட்சத்துக்கும் கீழ் உள்ள பணியாக இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டும், அந்த அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலமும் ஒப்பந்தப்புள்ளி அளிக்கும்படியும் கோர வேண்டும். ரூ. 5லட்சத்துக்கு மேல் உள்ள பணிகளுக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி மலரில் விளம்பரமும், ரூ. 25 லட்சத்திற்கு மேலான பணிக்கு நாளிதழில் ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் என்பது அரசு விதி.    

ஆனால் இவ் விதியை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்பற்றாமல் டிசம்பர் மாதத்திலேயே பள்ளி மைதானத்தைச் சீரமைக்க தன்னிச்சையாக ஒப்பந்தக்காரருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் கழித்து இப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதற்கான பணி உத்தரவு 3.1.2011 அன்று வழங்கப்பட்டுள்ளது.

இப் புகார் குறித்து பழனி ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலர் கண்ணையன் கூறியதாவது:  

  ஒப்பந்தப்புள்ளி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் விவாதத்தில் வைத்து ஒப்புதல் பெற்ற பின்னர் டெண்டர் கோரப்பட்டு குறைந்த விலைப்புள்ளி கொடுப்பவருக்கு பணி ஆணை வழங்கப்படும். பள்ளி என்பதால் அவசர நிலை கருதி பணி செய்திருக்கலாம். அல்லது பள்ளியின் நலன் கருதி ஊர் மக்களே மைதானத்தில் மண் அடித்திருக்கலாம்.

ஒப்பந்தக்காரருக்கு பணி உத்தரவு 3.1.2011-ல் வழங்கப்பட்டுள்ளது. அவர் முன்னமே பணி செய்திருந்தால், பணியை ரத்து செய்வதாகத் தெரிவித்தார்.

   இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசு விதிமுறையை மீறிச் செயல்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆண்டிப்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments