பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படுமா?
திண்டுக்கல், ஜன. 6: பாண்டியராஜபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படுமா என திண்டுக்கல் மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் வ
திண்டுக்கல், ஜன. 6: பாண்டியராஜபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படுமா என திண்டுக்கல் மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, நிலக்கோட்டை, பழனி, நத்தம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 6,500 ஏக்கர் பரப்பில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. இந்த கரும்புகளை தற்போது மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள ஆலைக்கு சர்க்கரை தயாரிப்பதற்காக அனுப்பி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பாண்டியராஜபுரத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2002 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. அரசியல் குறுக்கீடுகள் காரணமாக இந்த ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கரும்புகளை தற்போது மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஆலைக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். ஆலை அதிகாரிகள் வரும்போதுதான் மாவட்டத்தில் கரும்பை வெட்ட முடிகிறது. கால தாமதம் ஆகும்போது கரும்பு முற்றுவதால் பிழிதிறன் குறைந்து விலை குறைவாகக் கிடைக்கிறது. மாவட்டத்தின் எல்லையில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், உரிய நேரத்தில் கரும்பு வெட்டப்படுவதுடன், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
Advertisement
இதுகுறித்து வடமதுரை வட்டாரம் தாமரைப்பாடியைச் சேர்ந்த கரும்பு விவசாயி வீரமணி கூறியதாவது:
கடந்த ஆண்டு ஒரு டன் கரும்பு ரூ. 1,600-க்கு விலை போனது. தற்போது ஒரு டன் ரூ. 1,900-க்கு விற்கப்படுகிறது. ஓர் ஏக்கரில் ரூ. 20 ஆயிரம் செலவு செய்து கரும்பு பயிரிட்டால், 50 டன் வரை விளைச்சல் கிடைக்கும். நல்ல விளைச்சல் இருந்தால் 70 டன் வரை எடுக்க முடியும். தற்போது ஏக்கருக்கு 50 டன் தான் கிடைத்துள்ளது. இதற்கு கரும்பின் முன் பருவத்தில் மழை பெய்யாமல் பின் பருவத்தில் மழை பெய்துளளதால், விளைச்சல் குறைந்து போனது. இதுநாள் வரை கரும்புக்கு உரம் மட்டுமே போட வேண்டிய நிலை இருந்தது. தற்போது குருத்துப் பூச்சியின் தாக்குதல் வந்துள்ளதால், உரத்துடன் சேர்ந்து மருந்தும் 3 மாதம் மற்றும் 6 மாதங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டியுள்ளது.
கரும்பு பயிரிடப்படுவதற்கு முன்னர் விவசாயிகள் அதுகுறித்த விவரத்தை ஆலையில் பதிவு செய்து கொண்ட பின்னர், ஆலையின் பரிந்துரையின் பேரில், 1 ஏக்கருக்கு ரூ. 17 ஆயிரம் வங்கி கடனாக வழங்குகிறது. அறுவடை சமயத்தில் ஆலைக்கு தகவல் கொடுத்த பின் வண்டி வாடகை இல்லாமல் கரும்பை அதிகாரிகள் ஆலைக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் விவசாயிக்கு வாடகைச் செலவு மிச்சமாகிறது. இதேபோல், கரும்பின் தோகை மாட்டுத் தீவனமாக ஒரு கட்டு ரூ. 30-க்கு விலை போகிறது. இவை இரண்டும் விவசாயிக்குக் கிடைக்கும் கூடுதல் லாபம்.
திண்டுக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் பாண்டியராஜபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்ட வரை கரும்பு அறுவடை செய்ய தகவல் கொடுத்தவுடன், ஆலையினர் வந்து வெட்டிச் சென்றனர். தற்போது இந்த ஆலை மூடப்பட்டு விட்டதால், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்குத்தான் கரும்பை அனுப்ப வேண்டியுள்ளது. 2, 3 மாவட்டங்களில் இருந்து கரும்பு ஆலைக்கு வரும் சமயத்தில், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கரும்பு வெட்டுவதற்கான அனுமதி கிடைக்காமல் போகும்போது கரும்பு முற்றுவதால் பிழிதிறன் குறைகிறது. இதனால் கரும்புக்குக் கிடைக்கும் தொகையும் குறைந்து போகிறது.
எனவே, திண்டுக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் பாண்டியராஜபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத் தவிர, கரும்புக்குப் பணம் தரும் போது ஒரு டன்னுக்கு ரூ. 100 பிடித்தம் செய்து கொள்கின்றனர். இத் தொகை திருப்பி தரப்படுவதில்லை. இத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கரும்பு விவசாயி வீரமணி.