முகப்பு
மதுரை

சிவகங்கை அருகே கிடை மாடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள்

சிவகங்கை, ஜன. 16: சிவகங்கை தாலுகாவைச் சேர்ந்த கல்லூருணி கிராமத்தில் 60 ஆண்டுகளாக கிடை மாடு மேய்க்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இக் கிராமத்தில் பரவலாக கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது. இத

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:09 PM
பகிர்:

சிவகங்கை, ஜன. 16: சிவகங்கை தாலுகாவைச் சேர்ந்த கல்லூருணி கிராமத்தில் 60 ஆண்டுகளாக கிடை மாடு மேய்க்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இக் கிராமத்தில் பரவலாக கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது. இதுதவிர கிடை மாடுகள் வளர்க்கும் தொழிலில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் மாடுகளை வளர்க்கும் இவர்கள், அவற்றை நாள் முழுவதும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதிலேயே தங்களது நேரத்தைச் செலவிடுகின்றனர்.  இத்தொழிலில் ஈடுபட்டுள்ள மலைராசு, கண்ணன், மாரி ஆகியோர் கூறியதாவது:எங்களிடம் காளைகள், பசுக்கள் என மொத்தம் 500 மாடுகள் உள்ளன. பெரும்பாலும் சாம்பல் வண்ணத்தில் இருக்கும் இந்த மாடுகளை வயல்வெளிகளில் தொழு உரமிடுவதற்காகப் பயன்படுத்துகிறோம்.

வயல்களில் தொழுவம் அமைத்து, ஒரு இரவு மாடுகளைத் தங்கவைப்பதற்கு விவசாயிகள் எங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் தருவார்கள். இதனால், அவர்களின் வயல்களுக்கு நல்ல தொழு உரம் கிடைத்து மண் வளம் மேம்படும்.

கிடைக்கு பயன்படுத்தாத மற்ற சமயங்களில், பகலில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு இரவில் எங்கள் கிராமத்தில் தொழுவம் அமைத்து காவல் காப்போம்.

எங்களிடம் உள்ள பசுக்களை பெரும்பாலும் குட்டிகளை ஈனப் பயன்படுத்துகிறோம். பசுக்கள் அரை லிட்டர் அளவே பால் கொடுக்கும். அந்த பாலை நாங்கள் விற்பனை செய்வதில்லை. கன்றுகளுக்கே கொடுக்கும்படி செய்து விடுகிறோம்.ஒரு முறை கன்று ஈன்றதும் பசுக்களை விற்றுவிடுவோம். அவை 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும். காளை மாடுகளை 5 ஆண்டுகள் வரை வளர்த்து விற்போம். முரட்டுத்தனம் அதிகம் உள்ள இந்த காளைகளை ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகளுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். பலசாலியான காளை மாட்டுக் கன்றுகள் 7 ஆயிரம் ரூபாய் வரை விலை போகும்.

அதே சமயம் வயதான மாடுகளை அடிமாடுகளாக விற்று விடுவோம். கேரள வியாபாரிகள் எங்களிடம் மொத்தமாக மாடுகளை வாங்கிச் செல்வர். ஆண்டுக்கு சராசரியாக 50 மாடுகள் வரை விற்பனை செய்வோம் என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →