ராமநாதபுரம், மே 15: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் திறந்து வைக்கப்பட்ட புதிய பஸ் நிலையம், மக்களுக்கு பயன்பாடில்லாமல் இருப்பதுடன் மது அருந்தும் இடமாகவும் மாறிவிட்டிருக்கிறது.
கீழக்கரையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் புகழ்பெற்ற ஏர்வாடி தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுசேர்ந்து நடத்தும் சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தர்காவில் மனநோயாளிகளுக்கென்று சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படுவதால்
தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் யாத்ரீகர்கள் ஏராளமானோர் இங்கு வந்து குணமடைவதாகவும் நம்பப்படுகிறது. யார் வாடி நின்றாலும் ஏர்வாடி தர்காவுக்கு வாருங்கள் என்பதும் வழக்கு மொழியாகவே இருந்து வருகிறது.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய ஏர்வாடியில் பஸ் நிலையம் இல்லாமல் இருந்து வந்தது. எனவே, பஸ் நிலையத்தின் அவசியத்தை வலியுறுத்தி அப்பகுதி மக்கள், யாத்ரீகர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏர்வாடி தர்காவின் பின்புறம் ரூ.65.55 லட்சம் மதிப்பில் புதிதாக பஸ் நிலையம் அமைத்து திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து தர்கா வாசலுக்கு வரும் அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டுóம் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை அப்புதிய பஸ் நிலையம் எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது. அரசு பஸ்கள் கூட அங்கு செல்வதில்லை. ஏர்வாடி தர்காவுக்கு வரும் மனநோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தங்கும் இடமாகவும், கால்நடைகள் சுற்றித் திரியும் இடமாகவும் மாறியிருக்கிறது. இது தவிர இளைஞர்கள் பலர் பகல் நேரங்களில் கூட மது அருந்தும் இடமாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதச் சம்பவங்கள் நடக்கும் இடமாகவும் இருப்பதாக பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரனிடம் கேட்ட போது அவர் கூறியது:
புதிதாக திறந்து வைக்கப்பட்ட பஸ் நிலையத்தின் அருகில் மதுக்கடை இருப்பதால்தான் பலரும் மது அருந்தும் இடமாக பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ஏர்வாடி தர்காவுக்கு பின்புறம் பஸ் நிலையம் இருப்பதால் தர்கா வாசலுக்கு முன்புறம் வரும் அரசு பஸ்கள் எவையும் அங்கு செல்வதில்லை.
வழியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால் அங்கே போக முடியவில்லை என்றும் சில டிரைவர்கள் குறை கூறுகின்றனர். வட்டாரப் போக்குவரத்து அதிகாரியும் பல முறை நடவடிக்கைகள் எடுத்தும் எந்த பலனுமில்லாமல் போய் விட்டது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.