மதுரை

ஊராட்சி சமுதாய விளையாட்டு மைதானங்கள் சீரமைக்கப்படுமா?

தேனி, மே 16: தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய விளையாட்டு மைதானங்களை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற

கோ.ராஜன்

தேனி, மே 16: தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய விளையாட்டு மைதானங்களை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் தலா ரூ. 1.25 லட்சம் செலவில் சமுதாய விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல ஊராட்சிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமுதாய விளையாட்டு மைதானங்களில் கைப்பந்து, பூப்பந்து, வளைபந்து, கிரிக்கெட், மேலுந்து கம்பங்கள், இணை கம்பங்கள், கைப்பிடி குண்டுகள், சதுரங்கம் மற்றும் கேரம் பலகை, சிறுவர்களுக்கான ஏற்ற இறக்கப் பலகை, சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கு ஊராட்சி நிர்வாகத்துக்கு அரசு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஊராட்சிகளில் ஒவ்வோர் ஆண்டும் தைப் பொங்கல் திருவிழா, அண்ணா பிறந்த நாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு சமுதாய விளையாட்டு மைதானங்களில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய விளையாட்டு மைதானங்கள் பெரும்பாலான இடங்களில் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளன. பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடக்கும் சமுதாய விளையாட்டு மைதானத்தை சீரமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கொடுவிலார்பட்டி கிராம இளைஞர்கள் சிலர் கூறியதாவது: குடியிருப்புகளை விட்டு வெகு தொலைவில் உள்ள இடங்களிலும், நீர் நிலை புறம்போக்கு பகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்துக்குச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. திட்ட நிதியை செலவிடுவதில் ஆர்வம் காட்டிய ஊராட்சி நிர்வாகம் விளையாட்டு மைதானத்துக்கான அமைவிடம் குறித்து முறையாக ஆய்வு செய்யவில்லை எனக் கூறுகின்றனர்.

இதனால், பல்வேறு இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் பயன்படுத்தப்படாமல் புதர்மண்டிக் கிடக்கின்றன என்றனர்.

கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டு ஆர்வம் ஏற்படுவதற்கும், விளையாட்டு வீரர்கள், ராணுவப் பணி, காவல் துறை பணி ஆகியவற்றில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சி பெறுவதற்கும் வாய்ப்பாக ஊராட்சிகளில் சமுதாய விளையாட்டு மைதானங்களை சீரமைத்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT