மதுரை

தேனி அல்லிநகரம்: வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தேனி, அக். 13:  தேனி அல்லிநகரம் நகர்மன்றத்தின் 6-வது தலைவர் பதவிக்கான தேர்தலில் அரசியில் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 15 பேர் களம் இறங்கியுள்ளனர். இதில், நேரடிப் போட்டியில் உள்

கோ.ராஜன்

தேனி, அக். 13:  தேனி அல்லிநகரம் நகர்மன்றத்தின் 6-வது தலைவர் பதவிக்கான தேர்தலில் அரசியில் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 15 பேர் களம் இறங்கியுள்ளனர். இதில், நேரடிப் போட்டியில் உள்ள திமுக., அதிமுக., வேட்பாளர்களுக்கு இடையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

     கடந்த 1964-ம் ஆண்டு உதயமான தேனி நகராட்சி, 1967-ம் ஆண்டு தேனி அல்லிநகரம் நகராட்சி என்று அழைக்கப்பட்டது. 1972-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1983-ல் முதல் நிலை நகராட்சியாகவும், 2008-ல் தேர்வு நிலை நகராட்சியாகவும் தேனி அல்லிநகரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

     வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வரும் தேனியில் 33 வார்டுகள் உள்ளன. நகர்மன்றத் தேர்தலில் 27 ஆயிரத்து 913 ஆண்கள், 28 ஆயிரத்து 94 பெண்கள் உள்பட மொத்தம் 56 ஆயிரத்து 7 பேர் வாக்களிக்க உள்ளனர்.

  தேனி அல்லிநகரம் நகராட்சியில் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவினர் 10 வார்டுகள், திமுக., காங்கிரஸ் தலா 4 வார்டுகள், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக தலா 2 வார்டுகள், பாமக., ஒரு வார்டு, சுயேச்சை வேட்பாளர்கள் 9 வார்டுகளில் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த நகராட்சிக் காலத்தில் திட்டங்கள்:

          தேனி நகராட்சியில் புதிய பஸ் நிலையத் திட்டம் கடந்த நகராட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு ரூ.54.88 லட்சம் மதிப்பில் எரிவாயு தகன மேடைத் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது வரை பணிகள் முழுமையடையாமல் உள்ளது.

 ரூ.25 லட்சம் செலவில் வீரப்பஅய்யனார் கோயில் சாலையில் தரைமட்டப் பாலம் அமைக்கப்பட்டது. நேருசிலைப் பகுதியை மையமாக வைத்து கம்பம், பெரியகுளம், மதுரை சாலைகளில் தெருமின் விளக்குகளை சாலையின் நடுவில் உள்ள இருவழிப்பாதை  போக்குவரத்து தடுப்புச் சுவரையொட்டி மாற்றியமைக்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கியுள்ளன.

     குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கக் கடந்த 5 ஆண்டுகளாக தாற்காலிகப் பணிகளுக்கு ரூ.3 கோடி வரை செலவிட்டுள்ள நகராட்சி நிர்வாகம், இந்த ஆண்டு வைகை அணை பிக்கப் டேம் பகுதியில் இருந்து தேனிக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டத்திற்கு அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 2010-ல் தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

     பொதுமக்களின் எதிர்பார்ப்பு:

     எரிவாயு தகனமேடை, பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திட்டச் சாலைகளை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும், மீருசமுத்திரம் கண்மாயை பராமரிக்க வேண்டும், வாரச் சந்தை வளாகம், பொதுக் கழிப்பிடங்கள் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும், புதிய வணிக வளாகங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும், நகராட்சி பூங்காக்களை பராமரிக்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தினமும் வழங்க வேண்டும், விரிவாக்க பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தரவேண்டும், அனைத்து பகுதிகளிலும் துப்புரவுப் பணிகளை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

     தேனி நகர்மன்றத் தலைவரை தீர்மானிக்கும் சக்தியாக நகரில் அதிக அளவில் வசித்து வரும் நாயுடு, நாடார் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் உள்ளனர். அதிமுக சார்பில் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த ராமராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்பு அக்கட்சியின் நகரச் செயலர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த எஸ்.முருகேசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ராமதாஸ், காங்கிரஸ் தரப்பில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.தஸ்லிம், தேமுதிக சார்பில் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த எம்.என்.கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜீவா, குமரேசன்(பாஜக), காஜாமைதீன்(பாமக),பெரியகருப்பன்(மதிமுக), சரவணன்(பகுஜன் சமாஜ்), செல்வராஜ்(விடுதலை சிறுத்தைகள்), சுயேச்சை வேட்பாளர்களாக அரசி, அக்கீம், ஜவஹர்தீன், ராஜதுரை, சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

  வெற்றி வாய்ப்பு யாருக்கு?

  திமுக., அதிமுக., வேட்பாளருக்கு இடையில் நேரடி போட்டி இருந்துவரும்  தேனி அல்லிநகரம் நகராட்சியில், நகர் மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பெரும்பாலான வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர் அதிக எண்ணிக்கையில் களம் இறங்கியுள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக நகர் மன்றத் தலைவர் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும் வேட்பாளர் அறிவிப்பு மாற்றம், வார்டுகளில் நிலவி வரும் உள்கட்சிப் பூசல் ஆகியவற்றால் அக்கட்சிக்கு கிடைக்கக் கூடிய வாக்குகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    திமுக வேட்பாளருக்கு சமுதாய வாக்குகள் மற்றும் நடுநிலையாளர்களின் வாக்குகள் அதிகமாக கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பினும், ஆதி திராவிடர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு வங்கிகள் சிதறுவதால், வெற்றி வாய்ப்பு இழுபறியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. நகர் மன்ற உறுப்பினர்களின் தேர்தல் பிரசாரம் பல்வேறு உத்திகளில் சூடுபிடித்துள்ள நிலையில், நகர் மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களும் இறுதி கட்டப் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT