மதுரை

அரசு பல்துறை பெருந்திட்ட வளாகச் சாலை மேம்படுத்தப்படுமா?

தேனி, பிப். 3:  தேனியில் உள்ள அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லும் சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேல் மேம்படுத்தப்படாமல் மண் சாலையாக போக்குவரத்துக்கு தகு

கோ.ராஜன்

தேனி, பிப். 3:  தேனியில் உள்ள அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லும் சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேல் மேம்படுத்தப்படாமல் மண் சாலையாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை அடுத்துள்ள இடத்தில் மாவட்ட பல்துறை பெருந்திட்ட வளாகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது.

பெருந் திட்ட வளாகத்தில் மாவட்ட பொதுச் சுகாதாரத் துறை, கல்வித் துறை, விவசாயத் துறை, கூட்டுறவுத் துறை அலுவலகங்கள், வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஊராட்சிகள் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த அலுவலகங்களில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். தேனியில் இருந்து பெருந்திட்ட வளாகத்துக்கு அரசு பஸ், மின் பஸ் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

    பெருந்திட்ட வளாகத்துக்குச் செல்வதற்கு தேனி-மதுரை சாலையில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தை அடுத்துள்ள பகுதி வழியாகவும், தேனி-பெரியகுளம் சாலையில் நகராட்சி புதிய பஸ் நிலைய வளாகத்தை அடுத்துள்ள பகுதி வழியாகவும் ஒன்றரை கி.மீ., தூரம் திட்டச் சாலை ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. பெருந் திட்ட வளாகம் செயல்படத் தொடங்கி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்தச் சாலை தார்ச் சாலையாக தரம் உயர்த்தப்படாமல் மண் சாலையாகவே உள்ளது.

  கரட்டுப் பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் செல்வதால் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் செல்பவர்கள் வாகனம் பழுதடைந்து பாதி வழியில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மழை காலங்களில் மண் சாலையில் வாகனங்களில் விபத்துகளில் சிக்குகின்றன.

     பெருந் திட்ட வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்வதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வழியாகச் செல்கின்றனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லும் கன ரக வாகனங்கள் ஆட்சியர் அலுவலக வளாகம் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாததால், வேறு வழியின்றி குண்டும் குழியுமாக உள்ள மண் சாலையைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் சாலையில் பஸ்களை இயக்குவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

      பெருந் திட்ட வளாகத்துக்குச் செல்லும் சாலையின் ஒரு பகுதி வடவீரநாயக்கன்பட்டி கிராமத்துக்கும், ஒரு பகுதி தேனி நகராட்சிக்கும் உள்பட்டது. குடியிருப்புப் பகுதிகள் இல்லாததால், இந்தச் சாலையை மேம்படுத்துவதற்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. பெருந் திட்ட வளாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லும் சாலையை தார்ச் சாலையாகத் தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

     இதுகுறித்து தேனி நகராட்சித் தலைவர் எஸ்.முருகேசனிடம் கேட்டதற்கு, மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை பெற்று பெருந் திட்ட வளாகம் செல்வதற்கான சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT