சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்களை நியமிக்கும் பணி மும்முரம்
சிவகங்கை, ஜூலை 2: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியைத் துவங்க மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இங்கு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, கல்லூரி செயல்படத் தயார் நிலையில் உள்ளது. இந்த நில
சிவகங்கை, ஜூலை 2: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியைத் துவங்க மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இங்கு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, கல்லூரி செயல்படத் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், கல்லூரியில் பேராசிரியர்கள், ஊழியர்கள் நியமிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த தி.மு.க. ஆட்சியில் சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, கல்லூரி தொடங்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 21.2.2009-ம் தேதி கல்லூரி தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்பின், சிவகங்கையை ஒட்டியுள்ள மேலவாணியங்குடி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கான கட்டடம் மற்றும் கல்லூரி மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டன.
தற்போது இங்கு 300 படுக்கைகள் கொண்ட அறை, புற நோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி, ஆய்வுக்கூடம், பிணவறை, இயற்கூடம், நிர்வாகக் கட்டடம், விரிவுரைக் கட்டடம், நூலகம், தலா 125 மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், 200 படுக்கைகள் கொண்ட மற்றொரு அறை, 400 மாணவர்களுக்கான விரிவுரைக்கூடம், வங்கி, தபால் அலுவலகம், ஜிம், உள்ளிருப்பு மாணவர் மற்றும் மாணவியர் குடியிருப்புகள், அலுவலர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள், 200 செவிலியர்களுக்கான குடியிருப்புகள், கலை அரங்கம் மற்றும் தேர்வு அறை, கல்லூரி முதல்வர் குடியிருப்பு, மருத்துவ அலுவலர்கள் குடியிருப்பு என ஒரு மருத்துவக் கல்லூரிக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, அப் பணிகள் முடிவடைந்துள்ளன.
இவை தவிர, ரூ. 4.78 கோடி மதிப்பீட்டில் கல்லூரியைச் சுற்றி சுற்றுச்சுவர், அணுகுசாலை, நுழைவு வாயில் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பணிகள் நடைபெறும்போதே இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் கல்லூரியை அடிக்கடி பார்வையிட்டு, ஒவ்வொரு முறையும் குறைகளைச் சுட்டிகாட்டிச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து, அக் குழுவினர் தெரிவித்த குறைகளும் உடனடியாக சரி செய்யப்பட்டன. இதற்கிடையே, சிவகங்கையில் செயல்பட்டுவந்த மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழக அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சில் நடப்பு கல்வியாண்டில் (2012-2013) மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள முதல்கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது.
நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் இக் கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
ஜூலை 5-ம் தேதி தொடங்கவுள்ள எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கவுன்சலிங்கில் மருத்துவக் கல்லூரிக்கான பட்டியலில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி 18-வதாக இடம்பெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு மருத்துவப் படிப்பு தொடங்கப்பட உள்ள நிலையில், கல்லூரிக்கு தேவையான பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டீன் கே.முனியப்பன் தெரிவித்த விவரம்:
நடப்பாண்டில் செயல்பட உள்ள சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு முதலாமாண்டு 3 துறைகளுக்கு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி மருத்துவமனைக்கு தற்போது 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். இன்னும் 60 மருத்துவர்கள் தேவை உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க மருத்துவக் கல்வி இயக்குநர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி மருத்துவம், பொது மருத்துவம் பார்க்கப்படும். சில ஆண்டுகளில் இம் மருத்துவமனையில் சிறப்பு தனி மருத்துவமும் பார்க்கப்படும்.
முதல் மருத்துவ கவுன்சிலிங்கில் சிவகங்கை கல்லூரி இடம்பெறும். மாணவர் சேர்க்கை முடிந்து செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கப்படும். முதலாமாண்டில் உடற்கூறு இயல், உடற் செயலியல், உயிர் வேதியியல் ஆகிய துறைகளுக்கு ஒவ்வொரு துறைக்கும் தலா 3 பேராசிரியர்கள் வீதம் நியமிக்கப்படுவர். கல்லூரிக்கு முதலாமாண்டுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கான மருந்துகளும் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பு வைக்கப்படும் என்றார்.