முகப்பு
மதுரை

ராமேசுவரம்- திருப்பதி ரயில் சேவை நீட்டிப்புக்கு வரவேற்பு

மானாமதுரை, மார்ச் 16: ரயில்வே பட்ஜெட்டில் மதுரை- திருப்பதி வாராந்திர இருமுறை ரயில்களை, மானாமதுரை வழியாக ராமேசுவரத்துக்கு நீட்டித்து வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும் என்ற அறிவிப்பு மற்றும் மானாமதுர

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

மானாமதுரை, மார்ச் 16: ரயில்வே பட்ஜெட்டில் மதுரை- திருப்பதி வாராந்திர இருமுறை ரயில்களை, மானாமதுரை வழியாக ராமேசுவரத்துக்கு நீட்டித்து வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும் என்ற அறிவிப்பு மற்றும் மானாமதுரை- மன்னார்குடி புதிய ரயில் அறிவிப்புக்கும் பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்கெனவே, ராமேசுவரத்திலிருந்து ஓகாவுக்கு திருப்பதி வழியாக இரு மார்க்கத்திலும், வாரம் இரண்டு முறை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது மதுரை-திருப்பதி இடையே இயக்கப்படும் ரயிலை, ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்துள்ளதோடு இந்த ரயில் வாரத்துக்கு மூன்று முறை இயக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இதன்மூலம், இனி ராமேசுவரம்- திருப்பதி இடையே வாரத்துக்கு 4 ரயில் சேவைகள் கிடைத்துள்ளன.

தற்போது சிவகங்கை, ராமநாதபுரம் மக்கள் திருப்பதி செல்வதற்கு ஓகா ரயிலில் அல்லது மதுரை, சென்னை சென்று, அங்கிருந்து திருப்பதி செல்லும் நிலை இருக்கிறது.

இந்த நிலையில் ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை, மதுரை வழியாக திருப்பதிக்கு இரு மார்க்கத்திலும் வாரத்துக்கு 8 முறை ரயில் சேவை கிடைத்துள்ளதால், இம் மாவட்ட மக்கள் இனி எளிதாக திருப்பதிக்குச் சென்று திரும்பும் வசதி கிடைத்துள்ளது.

இந்த பட்ஜெட்டில், மன்னார்குடி- மானாமதுரை இடையே தினசரி பயணிகள் ரயில் இயக்கவுள்ள அறிவிப்புக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை, சிவகங்கை மாவட்ட மக்கள் மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் திருச்சி, மதுரை சென்று அங்கிருந்து பஸ் அல்லது ரயில் மூலம் மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பினர்.

தற்போது மன்னார்குடி- மானாமதுரை இடையே, புதிய ரயில் சேவை அறிவிப்பால் இனி, இம் மாவட்ட மக்கள் நேரடியாக மன்னார்குடி மற்றும் இதனைச் சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று திரும்ப முடியும்.

ஆனால், எந்த மார்க்கத்தில், இந்த ரயில் இயக்கப்படுகிறது என்பதை, ரயில்வே நிர்வாகம் தெளிவாக அறிவிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, வர்த்தகர் சங்க இணைச் செயலாளர் ராமு கூறியதாவது:

ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை-திருப்பதி ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு ஆறுதலாக உள்ளது என்றார்.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கச் செயலாளர் மோகனசுந்தரம் கூறுகையில் மதுரை-திருப்பதி ரயில் மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார்.

இந்திய மருத்துவக்கழக கிளைச் செயலாளரும், பாண்டியன் கிராம வங்கி இயக்குநருமான டாக்டர் எஸ்.செல்வராஜ் கூறியது:

மன்னார்குடி-மானாமதுரை புதிய ரயில் சேவை அறிவிப்பு வரவேற்கக்கூடிய அம்சமாகும். இந்த ரயிலை காரைக்குடி மார்க்கத்தில் இயக்கினால் ஏராளமானோர் பயனடைவார்கள் என்றார்.

மானாமதுரை பேரூராட்சித் தலைவர் ஜோசப்ராஜன் கூறுகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மதுரை-திருப்பதி ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ராமேஸ்வரத்திலிருந்து கோயமுத்தூர், ஈரோடு ஆகிய இடங்களுக்கு ரயில் இயக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →