முகப்பு
மதுரை

கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா?

சிவகங்கை, மே 17: புதுப் பொலிவுடன் திகழ வேண்டிய சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையால் பொலிவிழந்து, ஆங்காங்கே துர்நாற்றம் வீசி வருகிறது. சிவகங்கை மருத்துவக

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

சிவகங்கை, மே 17: புதுப் பொலிவுடன் திகழ வேண்டிய சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையால் பொலிவிழந்து, ஆங்காங்கே துர்நாற்றம் வீசி வருகிறது.

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு ஆகியவை முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. முன்பு பொது மருத்துவமனையாகச் செயல்பட்டபோது இருந்ததைவிட தற்போது கூடுதலாக நோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

தேவையான அளவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் இங்கு இன்னும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. பல கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உள்ளே இருக்கும் கழிப்பறையை அங்குள்ளவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகிலேயே அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகளுக்கான வார்டு உள்ளது. அங்கு கழிப்பறை வசதி இல்லாததால், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த கழிப்பறையிலிருந்து தண்ணீர் வெளியே வழிந்து அவசர சிகிச்சைப் பிரிவே சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

மேலும், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்காங்கே தூசி படிந்த வண்ணம் உள்ளது. தரையைப் பெருக்கி சுத்தம் செய்யாமல் இருப்பதால் புதுப்பொலிவுடன் திகழ வேண்டிய மருத்துவமனை இதற்குள்ளாகவே இப்படி ஆகிவிட்டதே என பலரும் பேசியபடி செல்வதைக் காண முடிகிறது.

இரு சக்கர வாகனங்கள் மருத்துவமனையின் வாசலிலேயே நிறுத்தப்படுவதால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வருவதில் சிரமம் ஏற்படுகிறது.

வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மண் கொட்டி சீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் வாகனங்களை நிறுத்த முடியாத அளவுக்கு அந்த தளம் மேடாக உள்ளது. இதனால் வாகன நிறுத்தும் இடம் இருந்தும் பயனற்று உள்ளது.

இவை குறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது 7 சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் 8 பேரை சேர்க்க உத்தரவு வந்துள்ளது. விரைவில் சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் உள்ள அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளுக்கான பிரிவை வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளோம்.

அதன் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவு கழிப்பறையை வெளி நோயாளிகள் பயன்படுத்தாமல் சுகாதாரம் காக்கப்படும்.

கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டே இருப்பதால் தூசி படிகிறது. மேலும், மருத்துவமனைக்கு வரும் பாதையில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தார்ச்சாலை அமைக்கப்பட்டால் மருத்துவமனைக்கு உள்ளே மண் படிவது குறையும்.

மேலும், தரையை சுத்தம் செய்ய விரைவில் இயந்திரத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது வந்ததும் தரை தூய்மையாக வைக்கப்படும்.

வாகனங்களை வழியில் நிறுத்துவதை தடுக்க காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து குறைகளும் படிப்படியாகச் சீரமைக்கப்படுகின்றன என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →