மதுரையில் லாட்டரி சீட்டு விற்பனை மும்முரம்: 2 பேர் கைது
: மதுரை நகரில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள் விற்பனை நடப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளன
: மதுரை நகரில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள் விற்பனை நடப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுரையில் கேரளம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் தங்குதடையின்றி விற்கப்படுவதாகவும், அதன் முடிவுகள் ரகசியமாக அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் எனக் கூறி, போலி லாட்டரி சீட்டுகளையும் சிலர் விற்று வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கோரிப்பாளையம், காமராசர் சாலைப் பகுதியிலுள்ள கிருஷ்ணாபுரம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி பகுதி என மதுரையின் பல இடங்களிலும் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கீரைத்துறையைச் சேர்ந்த அழகர் (47) என்பவர் அளித்த புகாரின்பேரில், பாலரெங்காபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (50) என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 205 கேரள மாநில லாட்டரி சீட்டுகளும், கணினி, பிரிண்டர் மற்றும் ரூ. 7,600 ரொக்கம், 2 செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அதேபோன்று, காமராசர் சாலை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் அளித்த புகாரின்பேரில், தெற்காவணி மூல வீதியைச் சேர்ந்த கணேசன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து, செல்போன், கணினி, பிரிண்டர், 158 கேரள லாட்டரி சீட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கணேசன் போலி லாட்டரி சீட்டுகளை விற்றதாகவும் புகார் வந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரையில் கடந்த ஆண்டு இல்லாத அளவுக்கு தற்போது, லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.