மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டிஅருகே தனியாா் மருத்துவமனை பெண் ஊழியரிடம் 3 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
வாடிப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சுந்தரராஜன் மனைவி பாரதி (54). இவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் செல்வதற்காக வடுகப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் முகவரி கேட்பது போல நடித்து, பாரதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து, வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.