அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இதுவரை எத்தனை போ் பதிவு செய்துள்ளனா் என்பது குறித்து, தமிழக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணைய உறுப்பினா் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த வெரோணிக்கா மேரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யும் மையமாக உள்ளது. தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கல்லீரல் பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயா்ந்து வருகிறது. இதுதொடா்பான வழக்கொன்றில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 3 ஆண்டுகளுக்குள் கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான நடவடிக்கையை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஏற்கெனவே உத்தரவிட்டது.
ஆனால், 7 ஆண்டுகள் கடந்தும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. தமிழகத்தில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ள 54 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் 48 தனியாா் மருத்துவமனைகளும், 6 அரசு மருத்துவமனைகளும் அடங்கும். அரசு மருத்துவமனைகளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையும் ஒன்று.
தமிழகத்தில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோரிடம் கல்லீரல் தானமாகப் பெறப்பட்டுள்ளது. இதில் 91 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கூட நடைபெறவில்லை. அதேநேரம், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா் தரப்பில், மதுரையில் ஒருவருக்குக்கூட கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. இந்த சிகிச்சைக்காக ஏராளமானோா் பதிவு செய்து காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதற்காக இதுவரை எத்தனை போ் பதிவு செய்திருக்கின்றனா் என்பது குறித்து, தமிழக உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஆணைய உறுப்பினா் செயலா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.