முகப்பு
ஸ்பெஷல்

தலசீமியா பரவக்கூடியதா? வராமல் தடுக்க முடியுமா? - நம்பிக்கையும் உண்மையும்

தலசீமியா நோய் பற்றிய தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்...

Updated On : 19 பிப்ரவரி 2026, 11:00 am IST
கோப்புப்படம் - IANS
பகிர்:

தலசீமியா தொற்றக்கூடியதா? பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்கு வருகிறதா? தலசீமியா வராமல் தடுக்க முடியுமா?

புவனேஸ்வரத்தில் உள்ள ஐஎம்எஸ் & எஸ்யுஎம் மருத்துவமனையின் ரத்தவியல், பிஎம்டி மற்றும் செல் சிகிச்சை பேராசிரியர் டாக்டர் பிரியங்கா சமல், தலசீமியா குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதிலளிக்கிறார்.

தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

Advertisement

Advertisement

தலசீமியா தொற்றக்கூடியது

தலசீமியா, பெற்றோரிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு குறைபாடுள்ள மரபணு மூலம் பரவுகிறது. தொடுதல், உணவு அல்லது பொருள்களைப் பகிர்தல், இருமல், சளி மூலமாக இது மற்றவர்களுக்குப் பரவாது.

தலசீமியாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுகிறது

இரண்டு பெற்றோர்களுமே தலசீமியா லேசான(மைனர்) பண்புகளைக் கொண்டிருந்தால் பெற்றோர்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தாலும்கூட, அவர்களின் குழந்தைக்கு தீவிரமான தலசீமியா(மேஜர்) பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் தலசீமியா மேஜர் வருவதற்கு 25% வாய்ப்பும் தலசீமியா மைனர் வருவதற்கு 50% வாய்ப்பும் எந்த பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தைக்கான 25% வாய்ப்பும் உள்ளது. எனவே, தலசீமியா மைனர் உள்ள குழந்தைகள் அறிகுறியற்றவர்களாகவும் நோயற்றவர்களாகவும் கருதப்படுவதால் அந்த கர்ப்பத்தைத் தொடர 75% வாய்ப்பு உள்ளது. திருமணம் அல்லது கர்ப்பத்திற்கு முன் பரிசோதனை மிகவும் முக்கியமானது, இப்போது பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனையில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தலசீமியா மைனர் என்பது ஒரு நோய்

அறிகுறிகள் இல்லாத லேசான பாதிப்பு கொண்ட தலசீமியா (மைனர்) என்பது ஒரு நோய் அல்ல. பாதிப்புள்ளவர்கள் பொதுவாக சாதாரண வாழ்க்கையை வாழ்கிறார்கள், அவர்களுக்கு லேசான ரத்த சோகை மட்டுமே இருக்கலாம். அவர்கள் நோயாளிகளாக கருதப்படுவதில்லை.

ரத்தமாற்றம் தலசீமியாவை குணப்படுத்தும்

வழக்கமான சிகிச்சையான ரத்த மாற்றம், தலசீமியா மேஜர் நோயாளிகள் உயிர்வாழ உதவுகிறது, ஆனால், அவை நோயைக் குணப்படுத்துவதில்லை. குறைபாடுள்ள சிவப்பு அணுக்களை மட்டுமே மாற்றுகின்றன. குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கு தொடர்ச்சியான ரத்த மாற்றம் தேவை, ஹீமோகுளோபின் அளவு 10 கிராம் அளவில் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்.

செல் மாற்று அறுவைச் சிகிச்சை அல்லது செல்லுலார் சிகிச்சை பயன்பாட்டுக்கு வருவதால், அலோஜெனிக் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.

தலசீமியா மாற்று அறுவைச் சிகிச்சை செய்யுமளவுக்கு தீவிரமானது அல்ல

சிகிச்சை இல்லாமல் நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் ரத்த மாற்றம், இரும்புச்சத்து அதிகமாவதால் இதயம், கல்லீரல், நாளமில்லா சுரப்பியில் பிரச்னைகள் மற்றும் ஆயுள்காலம் குறைவதை எதிர்கொள்கின்றனர். அதேநேரத்தில் மாற்று அறுவைச் சிகிச்சை, சாத்தியமான மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை வழங்குகிறது.

மரபணு சிகிச்சை, மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக உள்ளது.

மரபணு சிகிச்சை நம்பிக்கைக்குரியது, ஆனால் அதிக செலவுடையது. இன்னும் பல நாடுகளில் பரவலாகக் கிடைக்கவில்லை. அலோஜெனிக் மாற்று அறுவை சிகிச்சைதான் உலகளவில் அதிக விருப்பமாக உள்ளது.

பெரும்பாலான குடும்பங்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை கட்டுப்படியாகாது

இந்தியா போன்ற நாடுகளில் அரசின் திட்டங்களும் தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளும் தகுதியுள்ள நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சையை ஆதரிக்கின்றன. நீண்ட கால ரத்த மாற்றம் மற்றும் செலேஷன் சிகிச்சையும் நிதி ரீதியாக சுமையாக இருக்கலாம். அலோஜெனிக் மாற்று அறுவை சிகிச்சை நோயாளியை குணப்படுத்துவதால் மலிவான விருப்பமாகக் கருதப்படலாம்.

செல் மாற்று அறுவைச் சிகிச்சை, நோயாளிகளுக்கு கடுமையான ஜிவிஹெச்டி எனும் நோயை உருவாக்கும்

ஜிவிஹெச்டி ஆபத்து, ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சையில் முன்வரும்கொடையாளர்களைப் பொறுத்தது. முறையாக சிகிச்சையுடன் மாற்று அறுவைச் செய்யும்போது குறிப்பாக நோயாளிகளுக்கு பொருந்தக்கூடிய உடன்பிறந்தவர்களின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தும்போது பாதிப்பு குறைவு.

தலசீமியா நோயாளிகள் நீண்ட காலம் வாழ முடியாது

வழக்கமான ரத்தமாற்றம், கண்காணிப்பு என நவீன பராமரிப்புடன் நோயாளிகள் முதிர்வயதில்கூட உயிர் வாழ்கின்றனர். வாழ்நாள் முழுவதும் ரத்தமாற்றம் இல்லாமல் வெற்றிகரமான மாற்று அறுவைச் சிகிச்சை இப்போது உள்ளது. நோயெதிர்ப்பு மீட்கப்பட்டவுடன் நீண்ட காலத்திற்கு மருந்து எடுக்கத் தேவையில்லை.

தலசீமியாவைத் தடுக்க முடியாது

பரிசோதனை, மரபணு சோதனை, பெற்றோர் நோயறிதல் மூலம் தலசீமியா வராமல் தடுக்கப்படுகிறது. சைப்ரஸ், இத்தாலி போன்ற நாடுகள் தேசிய பரிசோதனை திட்டங்கள் மூலம் புதிய பாதிப்புகளைக் கணிசமாகக் குறைத்துள்ளன.

தலசீமியா பாதிப்புள்ளவர்களுக்கு இடையிலான திருமணம் தடை செய்யப்பட வேண்டும்

இது தவறான கருத்து. திருமணத்தைத் தடை செய்வதற்குப் பதிலாக தம்பதிகள் மரபணு ஆலோசனையைப் பெற்று பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

summary

Myths and facts about Thalassemia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.