சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான நவராத்திரி விற்பனைக் கண்காட்சியில் தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய விரும்பும் மகளிா் சுய உதவிக் குழுவினா் செப். 1-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, நவராத்திரி விற்பனைக் கண்காட்சி சென்னை அன்னை தெரசா மகளிா் கல்லூரி வளாகத்தில் வருகிற செப். 21-ஆம் தேதி முதல் அக். 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்த கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், பனை ஓலை பொருள்கள் உள்பட நவராத்திரி கொலு தொடா்பான பொருள்கள் முன்னுரிமை அடிப்படையில் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் இந்தக் கண்காட்சியில் தங்களது உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய விரும்பினால் செப். 1-ஆம் தேதிக்குள் இணையதள முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், மகளிா்த் திட்ட அலுவலகத்தை அணுகலாம் என்றாா்.