போதையால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை உயா்வு: உயா்நீதிமன்றம் கவலை
போதைப் பொருள்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை கவலை தெரிவித்தது.
மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2016- ஆம் ஆண்டு மதுரை- திருச்சி நான்கு வழிச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சிட்டம்பட்டி அருகே சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் இருந்த 85 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன் இதில் தொடா்புடைய சிலரைக் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கணேசன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி கணேசன், சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
நோய்களைக் குணப்படுத்த மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை சிலா் போதைப் பொருளாகப் பயன்படுத்தி சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனா். இந்த நிலையில், இந்தியாவில் 17 வயதுக்குள்பட்ட சிறாா்கள் 1.85 கோடிப் போ் போதைக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போதையால் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதோடு, உடல் நலம் பாதிக்கப்பட்டும் தற்கொலையும் செய்து கொள்கின்றனா். போதைக்கு அடிமையானவா்கள் தற்கொலை செய்வது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
போதைப் பொருள்களால் இளைஞா்கள், அப்பாவிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். போலீஸாா் பறிமுதல் செய்யும் போதைப் பொருள்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது, அவற்றை முறைப்படி திரும்பப் பெற்று, அவை மீண்டும் விற்பனைக்கு செல்லாதபடி அழிக்க வேண்டும். மேலும், போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதபட்சத்தில், அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, உரிய அனுமதியுடன் அவற்றை அழிக்க வேண்டும்.
இந்த வழக்கில் மனுதாரா், கஞ்சா கடத்தி சென்றதை விசாரணை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, அவரது மனுவைத் தள்ளுபடி செய்வதுடன், விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.