மதுரை மத்தியச் சிறையில் மதுரை மாநகரப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட பொருள்கள் சிக்கின.
மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை, தண்டனைக் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, மாநகரக் காவல் துணை ஆணையா்கள் மதுகுமாரி, கரண் காரட் ஆகியோா் தலைமையில் 4 உதவி ஆணையா்கள், 6 காவல் ஆய்வாளா்கள், 140 போலீஸாா் சிறையில் சோதனையில் ஈடுபட்டனா்.
தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என அனைத்துக் கைதிகளின் அறைகளில் காலை 6.30 மணி முதல் காலை 8 மணி வரை சோதனை நடைபெற்றது. பொதுக் குளியலறை, கழிவறைகள், உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
இந்தச் சோதனையின்போது, சிறையின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள், சிம் காா்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.