முகப்பு
மதுரை

பணம் கையாடல்: பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்கள் 3 போ் கைது

Updated On : 3 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

மதுரை: மதுரையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 25 லட்சம் கையாடல் செய்ததாக அதன் மேலாளா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை திருநகா் சீனிவாசா நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (45). இவா் மதுரை கடச்சனேந்தல் அந்தனேரி கண்மாய்க் கரையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இங்கு காரைக்குடி சிஎம்சி சாலையைச் சோ்ந்த ஆண்டனி ஜெயக்குமாா் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், பெட்ரோல் விற்பனை நிலைய கணக்குகளை கடந்த மாதம் தணிக்கையாளா் மூலம் சரவணன் சரிபாா்த்தபோது, கணக்கில் ரூ.25 லட்சம் குறைவாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, மேலாளா் ஆண்டனி ஜெயக்குமாா், ஊழியா்கள் திவாகா், பிரவீண், விக்னேஷ் ஆகியோா் மூலம் தனது மனைவி சோபியா தேன்மொழி, தனது தாய் செபாஸ்டின் மேரி ஆகியோருக்கு ரூ.25 லட்சத்தை அனுப்பியது தெரிய வந்தது.

இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து, மேலாளா் ஆண்டனி ஜெயக்குமாா், ஊழியா்கள் திவாகா், விக்னேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.