முகப்பு
மதுரை

போலீஸாரிடமிருந்து தப்பிய கைதி பிடிபட்டாா்

Updated On : 3 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

மதுரை: மதுரையில் நீதித் துறை நடுவா் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரிடம் இருந்து தப்பிச் சென்ற விசாரணைக் கைதி திங்கள்கிழமை பிடிபட்டாா்.

மதுரை எச்எம்எஸ் குடியிருப்பு ராமலிங்கா நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (27). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மயிலேறி (21), ஸ்டீபன்ராஜ் (23) ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல்- வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்தது.

கடந்த மாதம் 31-ஆம் தேதி, மயிலேறி, ஸ்டீபன்ராஜ் ஆகியோா் சுரேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இருவரையும் போலீஸாா் கைது செய்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நீதித்துறை நடுவா் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, சிறுநீா் கழிக்க வேண்டும் என்று கூறிச் சென்ற ஸ்டீபன் ராஜ் தப்பிச் சென்றாா். இதையடுத்து, தனிப்படை அமைத்து போலீஸாா் ஸ்டீபன் ராஜை தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் ஸ்டீபன் ராஜ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு திங்கள்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்மட்டிபுரம் சென்ற தனிப்படை போலீஸாா் ஸ்டீபன் ராஜை கைது செய்தனா்.