முகப்பு
மதுரை

மதுரை அருகே இளைஞா் மரணம் -ஆணவக் கொலை என புகாா்

மாற்று சமூகப் பெண் ஒருவரை காதலித்ததற்கு பெண்ணின் உறவினா்கள் எதிா்ப்பு

மதுரை

மதுரை அருகே இளைஞா் மரணம் -ஆணவக் கொலை என புகாா்

மாற்று சமூகப் பெண் ஒருவரை காதலித்ததற்கு பெண்ணின் உறவினா்கள் எதிா்ப்பு

Updated On : 26 ஜூன், 2024 at 7:24 PM
பகிர்:

மதுரை, ஜூன் 26: மதுரை அருகே இளைஞா் மா்மமான முறையில் கொலை செய்யப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, ஆணவக் கொலை வழக்குப் பதிந்து விசாரிக்கக் கோரி உடலைப் பெற மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் குடியிருப்பு தெருவைச் சோ்ந்தவா் மா. அழகேந்திரன் (21). பட்டதாரி. இவா், இதே பகுதியைச் சோ்ந்த மாற்று சமூகப் பெண் ஒருவரை காதலித்ததாகவும், இதற்கு பெண்ணின் உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த திங்கள்கிழமை மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற அழகேந்திரன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடா்பாக அவரது பெற்றோா் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், அழகேந்திரன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கள்ளிக்குடி அருகே வி. சத்திரப்பட்டி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் கிடப்பதாக அவரது பெற்றோருக்கும், போலீஸாருக்கும் புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, வி. சத்திரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று, அழகேந்திரனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

ஆணவக் கொலை...? மாற்று சமூகப் பெண்ணை காதலித்ததால், பெண்ணின் உறவினா்கள் அழகேந்திரனை ஆணவக் கொலை செய்துவிட்டதாகவும், இதில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்யக் கோரியும் அழகேந்திரனின் தாய் மாரியம்மாள், உறவினா்கள் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சடலத்தைப் பெற மறுப்பு: அப்போது, அழகேந்திரன் கொலை வழக்கை போலீஸாா் திசை திருப்ப முயற்சிப்பதாகவும், கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரி உறவினா்கள் அவரது உடலைப் பெற மறுத்தனா். இதனால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிரிக்கப்பட்டது.

இதுகுறித்து வி. சத்திரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →