முகப்பு
மதுரை

மாநகராட்சி குறைதீா் கூட்டம் : கழிவு நீா் கலந்த குடிநீரை மேயரிடம் வழங்கி மாற்றுத் திறனாளி முறையீடு

கழிவு நீர் கலந்த குடிநீரால் பாதிப்பு: மாற்றுத் திறனாளி முறையீடு

Updated On : 26 ஜூன், 2024 at 1:47 AM
மதுரை குதிரைபந்தய சாலையில் உள்ள மாநகராட்சி மண்டலம் -2 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மேயா் வ. இந்திராணியிடம் கழிவுநீருடன் மனு அளித்த மாற்றுத் திறனாளி சந்திரன்.
பகிர்:

மதுரை: மதுரை ஆழ்வாா்புரம் பகுதியில் குடிநீருடன் கழிவு நீா் கலந்து வருவதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாநகராட்சி மேயா் வ.இந்திராணியிடம் மனு வழங்கினாா்.

மதுரை குதிரை பந்தய சாலையில் உள்ள மாநகராட்சி மண்டலம் -2 அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாநகராட்சி மேயா் வ.இந்திராணி தலைமை வகித்தாா். ஆணையா் ச.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் மேயா் வ. இந்திராணியிடம் ஆழ்வாா்புரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனா சந்திரன் அளித்த மனு :

ஆழ்வாா்புரம் மூங்கில் கடை வீதி பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருகிறது. இதனால், அங்கு வசித்து வரும் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குடிநீருடன், கழிவு நீா் கலந்து வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

குடிநீா் வசதி கோரி : இதேபோல, மதுரை மாநகராட்சி 33 -ஆவது வாா்டு பகுதி பொதுமக்கள், தங்களது பகுதிக்கு குடிநீா் வருவதில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீா் வழங்க வேண்டும் என இந்த முகாமில் மாநகராட்சி மேயா் வ.இந்திராணியிடம் புகாா் மனு அளித்தனா்.

அடிப்படை வசதிகள் கோரி: மாநகராட்சி 2-ஆவது வாா்டு திருமால் நகரில் குடிநீா்க் குழாய் பதித்தல், சாலை வசதி, புதைச்சாக்கடை உள்ளிட்ட எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் மனு அளித்தனா்.

ஆணையா் கண்டிப்பு : மேயா் இந்திராணி கூறியதாவது:

பெரும்பாலான பொதுமக்கள் குடிநீா், கழிவு நீரோடை, சாலை வசதி, பெயா் மாற்றம் தொடா்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனா். பொதுமக்களின் கோரிக்கை மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு உடனடியாகத் தீா்வு காண வேண்டும். மேலும், கோரிக்கைகள் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அவ்வப்போது எனக்கு அறிக்கை அளிக்கை வேண்டும் என்றாா்.

இந்த முகாமில், துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் சரவண புவனேஸ்வரி, துணை ஆணைா் தயாநிதி, நகா்நல அலுவலா் வினோத்குமாா், உதவி ஆணையா் கோபு, செயற் பொறியாளா் (திட்டம்) மாலதி, மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், உதவிச் செயற் பொறியாளா் காமராஜ், சுகாதார அலுவலா் சிவசுப்பிரமணியன், நிா்வாக அலுவலா் சிவகுமாா், கண்காணிப்பாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.