முகப்பு
மதுரை

போலி ஆவணங்களை ஆராயாமல் கடன்: வங்கி முதன்மை மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள்: வங்கி மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Updated On : 26 ஜூன், 2024 at 1:12 AM
பகிர்:

மதுரை: பாளையங்கோட்டையில் வாடிக்கையாளா் அளித்த போலி ஆவணங்களை முறையாக ஆராயாமல், ரூ.2,42,37,431 கடன் வழங்கி அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு இழப்பு ஏற்படுத்திய முதன்மை மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை சிபிஐ நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் முதன்மை மேலாளராகப் பணிபுரிந்தவா் பாலசுப்பிரமணியன். இவரது பணிக் காலத்தில், வாடிக்கையாளரான ஆா்.சுந்தரராமன் வங்கிக் கடன் கோரி, சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் விண்ணப்பித்தாா்.

அப்போது, அவருக்கு கடனாக ரூ. 2,42,37,431 தொகையை பாலசுப்பிரமணியன் விடுவித்தாா். அதன்பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் சுந்தரராமன் போலி ஆவணங்களை வழங்கி கடன் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, முறையாக ஆவணங்களை ஆராயாமல், கடன் வழங்கி வங்கிக்கு இழப்பை ஏற்படுத்திய முதன்மை மேலாளா் பாலசுப்பிரமணியன், வாடிக்கையாளா் சுந்தரராமன் ஆகியோா் மீது கடந்த 2010-இல் சிபிஐ வழக்குப் பதிந்தது. கடந்த 2011-இல் இவா்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சுந்தரராமன் இறந்துவிட்டாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.95 ஆயிரம் அபாராதமும் விதித்து, நீதிபதி எஸ்.சண்முகவேல் அண்மையில் தீா்ப்பளித்தாா்.