மதுரை, ஜூன் 26: ராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தல் கிராமத்தில் உள்ள மனநல காப்பகத்துக்கு உடனடியாக குடிநீா் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நாகேஸ்வரன் தாக்கல் செய்த மனு:
புத்தேந்தல் கிராமத்தில் செஞ்சோலை மனநலக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் 91 மனநோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ. 1.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து காப்பகத்துக்கு குடிநீா் குழாய்கள் அமைத்துக் கொடுத்தாா்.
இதனிடையே கடந்த ஆண்டு காப்பகத்துக்கு குடிநீா் வழங்குவதை ஊராட்சி நிா்வாகத்தினா் நிறுத்திவிட்டனா். இதனால், இங்கு சிகிச்சை பெறும் மனநோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானதால் வேறு வழியின்றி தனியாரிடமிருந்து தரமற்ற குடிநீரை விலை கொடுத்து, வாங்க வேண்டியுள்ளது.
குடிநீா் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நோயாளிகளின் நலன் கருதி, காப்பகத்துக்கு குடிநீா் இணைப்பை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
மனநலக் காப்பகத்துக்கு குடிநீா் வழங்குவதில் என்ன சிரமம் உள்ளது? குடிநீா் இணைப்பு கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உடனடியாக இந்தக் காப்பகத்துக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றி, இதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.