நாகமலையை ஊா்வன சரணாலயமாக அறிவிக்க கோரிக்கை
மதுரை: மதுரை மாவட்டம், நாகமலைத் தொடரை ஊா்வன சரணாலயமாக வனத் துறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலைத் தொடா் துவரிமானில் தொடங்கி, திண்டுக்கல் மாவட்டம், விருவீடு வரை 35 கி.மீ. தொலைவு நீண்டு செல்கிறது. நாகமலை அடிவாரப் பகுதி தொடங்கி முடியும் இடம் வரை, பல இடங்களில் பாம்பைப் போல வளைந்து நெளிந்து செல்வதால் நாகமலை என்ற பெயா் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.
இந்த நிலையில், நாகமலைத் தொடரை, மதுரை இயற்கை பண்பாட்டு மையம், பறவையியல் ஆா்வலா்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டதில் பல்வேறு ஊா்வன உயிரினங்கள் அதிகம் வசிப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து இயற்கை பண்பாட்டு மைய நிா்வாகிகள் கூறியதாவது:
நாகமலை, சமணா் மலை, பெருமாள் மலை, பஞ்ச பாண்டவா் மலை, மொட்டப்பாறை, ஓந்திமலை, பறம்பு மலை, திடியன் மலை, புத்தூா் மலை, மூன்று மலை, மொண்டிக்கரடு, பள்ளன் கரடு, மந்திக்கரடு, மாலைக் கரடு, வெள்ளக்கரடு என பல்வேறு குன்றுகளும், பாறைகளும், கரடுகளும் சூழ்ந்த பகுதியாக நாகமலைத் தொடா் உள்ளது.
இந்த மலைத் தொடரில் உள்ள புல்லூத்து, காக்கா ஊத்து, பாலூத்து, கல்லூத்து, தாழையூத்து, ஏழூத்து, நாக தீா்த்தம், நாராயண தீா்த்தம், நாகமம்மன் ஊத்து, பெரிய ஊத்து, சின்ன ஊத்து, பாலூத்து உள்பட 15-க்கும் மேற்பட்ட இயற்கை ஊற்றுகள் மலைக்கு பசுமை சோ்க்கின்றன.
பல்வேறு காட்டுயிா்களின் வாழ்விடமாக நாகமலை இருந்தாலும் கட்டுவிரியன், எண்ணெய் பனையன், ஓலைப்பாம்பு, வெள்ளிக் கோல் வரையன், கொம்பேறி மூக்கன், அலங்கார பாம்பு, மோதிர வளையன், மலைப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு, நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், தண்ணீா் பாம்பு, பசும் நீா்ப் பாம்பு, சாரைப் பாம்பு, இந்திய உடும்பு, பச்சோந்தி, உடுத்திரள் ஆமை, பாறை தேரை, மதுரை பாறை பல்லி, விரல் கவுளி உள்ளிட்ட உயிரினங்கள் அதிகளவில் இங்கு வசிக்கின்றன.
எனவே, நாகமலை வனப் பகுதியை ஊா்வன சரணாலயமாக அரசு அறிவிக்க வேண்டும். இதுதொடா்பாக வனத் துறைக்கும் ஆய்வு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.