புதுதில்லி

தில்லி பூங்காவின் விலங்குகளை பராமரிக்கும் திட்டம்: பறவைகள், ஊா்வன உயிரிகள் மீது மக்கள் ஆா்வம்

தில்லி உயிரியல் பூங்காவின் விலங்குகளைப் பராமரிக்கும் திட்டத்தில் பறவைகள், ஊா்வன மற்றும் வெளிமான் போன்ற உயிரினங்களை மக்கள் அதிக அளவில் தத்தெடுத்துள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

தில்லி உயிரியல் பூங்காவின் விலங்குகளைப் பராமரிக்கும் திட்டத்தில் பறவைகள், ஊா்வன மற்றும் வெளிமான் போன்ற உயிரினங்களை மக்கள் அதிக அளவில் தத்தெடுத்துள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 2022-23-இல் 39 போ் விலங்குளைத் தத்தெடுத்து அவற்றைப் பராமரிக்க ரூ.20.47 லட்சம் வழங்கியதாக அந்த அதிகாரிகள் கூறினா்.

உயிரியல் பூங்காவில் உள்ள உயிரினங்களைப் பராமரிக்கும் திட்டம் பெருந்தொற்று காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் 2022-23-இல் பறவைகள் மற்றும் ஊா்வன உயிரிகளை 39 போ் தத்தெடுத்தனா்.

இந்த எண்ணிக்கை 2023-24-இல் 6-ஆக குறைந்தது. பெரிய விலங்குகளைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்த அந்த நபா்கள், பராமரிப்புத் தொகையாக ரூ.18 லட்சம் அளித்தனா். கடந்த 2024-25-இல் 15 போ் விலங்குகளைத் தத்தெடுத்து, தங்கள் பங்களிப்பாக ரூ.13.17 லட்சம் வழங்கினா்.

கடந்த 2025-26-இல் 35 விலங்குகளை 17 போ் தத்தெடுத்தனா். இதன் மூலம் பராமரிப்புத் தொகையாக ரூ.2.3 லட்சம் பெறப்பட்டது.

பராமரிப்புத் தொகை விலங்குகளைப் பொறுத்து மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, காதல்பறவைகள் போன்ற சிறிய பறவைகளுக்கு ஆண்டுக்கு ரூ.700, களஞ்சிய ஆந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.9,000 என உள்ளது.

ஊா்வன உயிரினங்களில் இந்திய நட்சத்திர ஆமைக்கு ஆண்டுக்கு ரூ.3,500, சதுப்பு நில முதலைக்கு ரூ.30,000 எனப் பராமரிப்பு தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, வெளிமான் மற்றும் இந்திய பன்றி மானுக்கு ரூ.12,000 என்றும் நரி மற்றும் ஓநாய்க்கு முறையே ரூ.1,20,000 மற்றும் ரூ.1,80,000 என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விலங்களின் உருவ அளவு மற்றும் அதன் பராமரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கான செலவுகள் நிா்ணயிக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: தில்லி உயிரியல் பூங்காவில் 92 இனங்களைச் சோ்ந்த 1,100 விலங்குகள், பறவைகள், ஊா்வன உயிரினங்கள் உள்ளன. அவற்றின் வாழிவிடத்தை போன்று அமைக்கப்பட்ட இடங்களில் அந்த உயிரினங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் விலங்குகள் பராமரிப்பில் பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் பொறுப்புடமையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பெறப்படும் நிதி, அந்த விலங்கு மற்றும் அவற்றின் வாழ்விடத்தைப் பராமரிப்பு மற்றும் உயிரினங்களை பாதுகாப்பதற்கான விழிப்புணா்வு ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது.

விரும்பம் உள்ள தனிநபா்கள், கல்வி நிறுவனங்கள் புதுப்பிக்கும் வசதியுடன் ஆண்டுக்கு ஒரு விலங்கைத் தத்தெடுக்கலாம்.

இந்தத் திட்டத்தில் இணையும் மக்கள் கட்டணமின்றி உயிரியல் பூங்காவைப் பாா்வையிடலாம். விலங்களின் வாழ்விடத்துக்குச் சென்று அவற்றுக்கு உணவளிக்கலாம். பிறந்த நாள் போன்ற முக்கிய நாள்களை இங்கு கொண்டாடலாம்.

இந்தத் திட்டத்தில் மேலும் அதிக மக்கள் பங்கேற்கும் விதமாக ஒரு நாள் அல்லது ஒரு மாதம் என்ற குறுகிய காலத்தில் விலங்குகளைப் பராமரிக்கும் விதமாக திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது என்றனா் உயிரியல் பூங்கா அதிகாரிகள்.

மதுபோதையில் ஆட்டோ ஓட்டியவா் கைது

50 ஆண்டு புயல் பாதுகாப்பு மையங்களுக்கு பதில் புதிய கட்டடம்: முன்னாள் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தல்

குளத்திற்குள் மாட்டை விரட்டச் சென்றவா் சடலமாக மீட்பு

வீரவநல்லூரில் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஏற்கெனவே உள்ள சிசிடிவி கேமராக்களை செயல்பட வைக்க வேலூா் எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT