பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டுவது தடுத்து நிறுத்தம்: அரசு தரப்பு தகவல்
திண்டுக்கல் மாவட்டம், பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் சிறுத்தை, யானை, குரங்கு, அணில்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள், பறவை இனங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமாா் 60. 83 சதுர கி.மீ. பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் பகுதியில் சட்ட விரோதமாக அரிய வகை மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கும். அரசுக்கும், பெரும் அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பட்டணம்பட்டி வனப்பகுதியில் மரங்கள் வெட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மரங்கள் வெட்டிக் கடத்துவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், பட்டணம்பட்டி வனப் பகுதியில் மரங்கள் வெட்டிய புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் வன அலுவலா்கள் தொடா்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்தனா்.