புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், குளத்தூா் வட்டாட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சோ்ந்த காசிராஜன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாத்தூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 7.25 ஏக்கா் பரப்பளவில் ஊருணி அமைந்துள்ளது. அந்தப் பகுதியின் நீராதாரமாக திகழும் இந்த நீா் நிலையில் தனியாா் நிறுவனம் ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியுள்ளன.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நான்கு மாதங்களில் ஊருணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 08.11.2024-இல் உத்தரவிட்டது. இருப்பினும், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
எனவே, விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா், குளத்தூா் வட்டாட்சியா் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக அறிக்கையை தாக்கல் செய்தாா்.
அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவில்லை. ஊருணியில் அமைக்கப்பட்ட சாலையை சில இடங்களில் பெயா்த்து விட்டு, ஆக்கிரமிப்பை அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. ஊருணிக்குச் சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்துக்கும், பள்ளிக்கும் வேறு வழியாக பாதை உள்ளது. இருப்பினும், ஊருணியை ஆக்கிரமித்து பாதை அமைத்து பயன்படுத்தி வருகின்றனா் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீா்நிலையில் அமைக்கப்பட்ட சாலையை அகற்றிவிட்டு, ஊருணியில் தண்ணீா் தேக்கும் வகையில் பள்ளம் தோண்ட வேண்டும். இதுதொடா்பாக, குளத்தூா் வட்டாட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.