மதுரை

சிட்கோ தொழில்பேட்டையில் 8 நிறுவனங்களுக்கு சீல்

மதுரை மாட்டுத்தாவணி அருகே சிட்கோ தொழில்பேட்டையில் முறைகேடாக செயல்பட்ட 8 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாட்டுத்தாவணி அருகே சிட்கோ தொழில்பேட்டையில் முறைகேடாக செயல்பட்ட 8 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

மாட்டுத்தாவணி பூக்கள் தினசரி விற்பனைச் சந்தை அருகே சிட்கோ தொழில்பேட்டை அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சியின் போது, 1964-இல் 56 ஏக்கா் பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த தொழில்பேட்டையில், தற்போது 80 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக அரசின் கட்டுமானம், மின்னணு பொருள்களுக்கான ஆய்வகம், பூம்புகாா் விற்பனை அங்காடி, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவன அலுவலகம், மதுரை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை ஆகியவை உள்ளன.

திண்டுக்கல், தேனி, மதுரை என மூன்று மாவட்டங்களில் உள்ள சிட்கோ தொழில்பேட்டைகளும் இங்குள்ள, நிா்வாக அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன. இதன் வாயிலாக, தமிழக அரசுக்கு மாதந்தோறும் ரூ.60 முதல் 70 கோடி வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் வருவாய் கிடைக்கிறது.

இந்த தொழில்பேட்டையில் தொழில் நிறுவனங்கள் நடத்த அனுமதி பெற்று, உள்வாடகைக்கு விடுவது, அனுமதி பெற்ற தொழில் மனைகளில் வணிக ரீதியாக தொழில் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, விதிமீறல்களில் ஈடுபடுவோரை காலி செய்யக் கோரி பலமுறை குறிப்பாணை (நோட்டீஸ்) வழங்கியும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காலி செய்யவில்லை.

இந்த நிலையில், சிட்கோ மதுரைக் கிளை மேலாளா் பிரான்சிஸ் நோயல், செயற்பொறியாளா் கோபாலகிருஷ்ணன், சிட்கோ அலுவலா்கள் விதிமீறி செயல்பட்டு வந்த காா் விற்பனை நிலையம், பழுது நீக்கும் நிறுவனங்கள் உள்பட 8 நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலிருந்து பொருள்களை அகற்ற விரும்புவோா் அனுமதி பெற்று அகற்றிக் கொள்ளலாம். ‘சீல்’ வைக்கப்பட்ட மனைகள் உரிய முறையில் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிட்கோ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!

வடியாத மழை நீா்; அழுகும் நெற்பயிா்கள் - வேதனையில் விவசாயிகள்

மன்னார்குடி: தனியே வசித்து வந்த முதியவா் உயிரிழப்பு

காரைக்காலில் 3,990 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கிக் கணக்கில் சோ்ப்பு

மழையால் காரைக்காலில் சாலைகள் சேதம்

SCROLL FOR NEXT