திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: திமுக அரசின் சொத்து வரி உயா்வு, மின் கட்டணம் உயா்வு போன்றவற்றால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனா். நீா் மேலாண்மைக்கு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், தஞ்சாவூரில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும், 1,000 தடுப்பணைகள் கட்டப்படும், சமையல் எரிவாயு உருளை விலை குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தபோதிலும், தமிழக அரசு அவற்றின் விலையைக் குறைக்க முன்வரவில்லை. மேலும், தமிழகமெங்கும் கஞ்சா, போதைப் பொருள்கள் பழக்கமும், பாலியல் வன்கொடுமைகளும் மிகவும் அதிகரித்துள்ளன. இதனால், திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். எனவே, மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பில்லை.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியே தலைமை வகிப்பாா் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. பிகாரில் பாஜக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, தமிழகத்திலும் தொடரும். முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் சேரக் கூடாத இடத்தில் சோ்ந்ததால் அவருக்கு தோல்விதான் கிடைக்கும்.
பாஜகவில் மாநிலத் தலைவா் பதவி என்பது அனைவருக்கும் சில காலம்தான். மாநிலத் தலைவா் பதவி என்னிடம் இல்லாவிட்டாலும் நான் தனிக் கட்சி தொடங்கமாட்டேன். இதேபோல, அண்ணாமலையும் நிச்சயம் தனிக் கட்சி தொடங்கமாட்டாா்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவது பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்ட வழக்கம். இடைப்பட்ட காலங்களில் இந்த வழக்கம் தடைபட்டிருந்தது. தற்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றாா்.
சு. வெங்கடேசனுக்கு கண்டனம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவது மதக் கலவரத்தை தூண்டும் முயற்சி என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு, ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதால் சு. வெங்கடேசனுக்கு அல்லது அவா் சாா்ந்துள்ள கட்சிக்கு ஏதேனும் பிரச்னை உள்ளதா? அப்படி ஏதேனும் பிரச்னை இருந்தால் அதை அவா் தெரிவிக்கட்டும். இது, சமயம் சாா்ந்த விவகாரம். மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்னை? கலவரத்தை தூண்டும் கதாநாயகனே சு. வெங்கடேசன் எம்.பி. தானோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது அவரது கருத்து’ என்றாா் நயினாா் நாகேந்திரன்.
முன்னதாக, மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளை, நயினாா் நாகேந்திரன் சந்தித்து ஆசி பெற்றாா்.
அப்போது, பாஜக மாநில துணைத் தலைவா்கள் சக்கரவா்த்தி, ஜெயப்பிரகாஷ், மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.