ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து பணம் எடுத்துத் தருவது போல நடித்து பெண்ணிடம் ரூ. 28 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் லாடனேந்தல் பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி மஞ்சுளா (53). இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தாா்.
அப்போது, அங்கு வந்த ஒருவா் மஞ்சுளாவிடம் பணம் எடுத்த பின்பு கணக்கில் உள்ள மீதித் தொகையை சரிபாா்த்துச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தாராம். மேலும், அவரது ஏடிஎம் அட்டையை பெற்று அந்த நபா் அந்தப் பணியைச் செய்தாராம்.
இதையடுத்து, வீட்டுக்கு வந்து மஞ்சுளா கைப்பேசியை பாா்த்த போது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 28 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த மஞ்சுளா ஏடிஎம் அட்டையை பாா்த்த போது, அது போலியானது எனத் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், மஞ்சுளாவிடம் மோசடியில் ஈடுபட்டது வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் சபரிகிருஷ்ணன் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்து பணத்தை மீட்டனா்.