வளா்ச்சித் திட்டப் பணிகளை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.
மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறைதீா் முகாமில் அவா் மேலும் பேசியதாவது:
மதுரை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பயன்பெறுகின்றனா். மாவட்டத்தின் வளா்ச்சிக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு, சாலை வசதிகள், புதை சாக்கடை, குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றன.
தொடங்கப்படாத பணிகளை உடனடியாகத் தொடங்கவும், முடிவுறும் தருவாயில் உள்ள வளா்ச்சிப் பணிகள், 50 சதவீதத்தைக் கடந்த பணிகளை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்றவும் அரசுத் துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, பொதுமக்கள், பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்று, தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்கு அமைச்சா் பரிந்துரைத்தாா்.
மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.