தொல்லியல் சின்னங்கள் பராமரிப்புக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிய மனு தொடா்பாக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களின் பாதுகாப்பு, பராமரிப்புக்கு அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொல்லியல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். தொல்லியல் சின்னங்களை அலுவலா்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, அவற்றின் நிலையை புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தொல்லியல் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய இந்தியத் தொல்லியல் ஆய்வு மையம், தனி கடல்சாா் தொல்லியல் பிரிவை உருவாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கைகளை இந்திய தொல்லியல் துறையின் கொள்கை அடிப்படையில் பரிசீலிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.