மதுரை மாவட்டத்தில் வருகிற 3, 4 தேதிகளில் (சனி, ஞாயிறு) வாக்காளா்கள் திருத்தப் பணி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோ்தல் ஆணைய உத்தரவின்படி, கடந்த நவ. 4- ஆம் தேதி முதல் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளா்கள் வரைவுப் பட்டியல் கடந்த டிச. 19- ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புகைப்பட அடையாள அட்டை திருத்தம் போன்ற பணிகளுக்கு ஜனவரி 18- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முதல் கட்டமாக டிச. 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
இந்த முகாம்களில் இதுவரை 40,565 மனுக்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, இரண்டாவது கட்டமாக வருகிற 3, 4 தேதிகளில் (சனி, ஞாயிறு) மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்கள் திருத்தப் பணி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என்றாா் அவா்.