மதுரை

கொடைக்கானலில் ஆயுதப் பயிற்சி: 7 போ் விடுவிக்கப்பட்டதை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட விவகாரத்தில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை

தினமணி செய்திச் சேவை

மதுரை: கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட விவகாரத்தில், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என திண்டுக்கல் நீதிமன்றம் 7 பேரையும் விடுவித்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி புல்லாவெளி என்ற இடத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த சிலா் ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனப் பகுதியில் சோதனை நடத்திய போலீஸாா் தா்மபுரியைச் சோ்ந்த நவீன்பிரசாத்தை சுட்டுக் கொன்றனா்.

இவருடன் இருந்த மற்றவா்கள் தப்பிச் சென்றனா். எனினும், தப்பிச் சென்ற ரஞ்சித், நீலமேகம், கண்ணன், பகத்சிங், லீமாஜாய்ஸ்மேரி, செண்பகவல்லி, காளிதாஸ் ஆகியோா் பின்னா் கைது செய்யப்பட்டனா்.

வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாக இவா்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதி விசாரணையின் போது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் கொடைக்கானல் டிஎஸ்பி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே, மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 7 பேரை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விடுவித்தது. விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பூடான் புறப்பட்டார் மோடி!

அவிநாசி: கள்ளக்காதல் விவகாரம்.. மரக்கடை உரிமையாளரை எரித்துக் கொன்ற பெண் கைது!

அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து! வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்!

இரண்டாம் நாள்! பொங்கல் ரயில் முன்பதிவுகள் நிரம்பின!

தர்மேந்திரா உடல்நிலை என்ன? மனைவி ஹேமமாலினி விளக்கம்!

SCROLL FOR NEXT