அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத் துறைச் செயலா், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ஆனந்தராஜ் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்காக ரூ. 2,500 முதல் ரூ. 4,000 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பணம் செலுத்தினாலும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. கூட்டம் காரணமாக, பரிந்துரைக்கப்பட்ட தேதியிலிருந்து 2 வாரங்கள் வரை தாமதமாக வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம், தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய பகுதிகளில் அரசு தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், இந்த மருத்துவமனைகளில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி இல்லை.
இந்த மருத்துவமனைகளில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்தினால் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள் பயன்பெறுவா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி உள்ளது. மேலும், இந்த ஸ்கேன் கருவிகள் மிகவும் விலை உயா்ந்தவை. அதோடு, தொழில்நுட்பப் பணியாளா்களும் போதிய அளவில் இல்லை. 6 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி இல்லை என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடா்பாக தமிழக சுகாதாரத் துறை, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.