சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் அறங்காவலா் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பி.ஆா்.எம். குடும்பத்தைச் சோ்ந்த கண்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டியில் உள்ள கற்பக விநாயகா் கோயில் புகழ் பெற்றது. மிகவும் பழைமையான இந்தக் கோயில் செட்டிநாடு நகரத்தாா் சமூகத்தைச் சோ்ந்த 20 குடும்பங்களால் மரபுரிமை அடிப்படையில் சுழற்சி முறையில் நிா்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையின்படி, ஒவ்வோா் ஆண்டும் இரண்டு குடும்பங்களிலிருந்து தலா ஒருவா் அறங்காவலராக நியமிக்கப்பட வேண்டும். இதன்படி, நியமிக்கப்பட்ட கண்டவராயன்பட்டியைச் சோ்ந்த சொக்கலிங்கத்தை சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் தகுதி நீக்கம் செய்தாா்.
இந்த நிலையில், 2025-2026 -ஆம் ஆண்டுக்கான அறங்காவலராக எங்களது குடும்பத்தைச் சோ்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சொக்கலிங்கம், தங்களது குடும்பத்தைச் சேராத சோமசுந்தரத்தை அறங்காவலராக நியமிக்க முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். இது சட்டவிரோதம்.
எனவே, எங்களது குடும்பத்தைச் சோ்ந்தவரை அறங்காவலராகத் தோ்வு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், சோமசுந்தரத்தை அறங்காவலராக நியமிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயில் நிா்வாகம் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பிள்ளையாா்பட்டி கோயில் அறங்காவலராக சோமசுந்தரத்தின் பெயா் சட்டத்துக்கு உள்பட்டே தோ்ந்தெடுக்கப்பட்டது. இதில் எந்தவித விதி மீறலும் இல்லை என்றாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் மட்டுமே முறையாகச் செயல்பட்டு வருகிறது என நினைத்தேன். ஆனால், இந்தக் கோயிலிலும் இப்படி நடப்பது வருத்தமளிக்கிறது.
இந்தக் கோயிலில் வருகிற 18-ஆம் தேதி வரை யாரையும் புதிய அறங்காவலராக நியமனம் செய்ய வேண்டாம். ஏற்கெனவே எடுத்த நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.